அமெரிக்கா – வடகொரியா பேச்சுவார்த்தையின் எதிரொலி வரலாற்றில் இடம் பிடிக்கிறது சிங்கப்பூர்…!
கொரிய தீபகற்பத்தில் அமைதியை உருவாக்க வழிவகுக்கும் விதத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி பேச்சுவார்த்தை ஜூன் 15அன்று சிங்கப்பூரில் நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் சோசலிச வடகொரியாவின் ஜனாதிபதி கிம் ஜோன் உன், அமெரிக்க ஜனாதிபதி ரொனால்டு டிரம்ப் பங்கேற்கின்றனர். அவர்களுடன் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே – இன் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் இந்த மூன்று நாடுகளுக்கிடையில் ஒரு அமைதி ஒப்பந்தம் உருவாகும் என்றும் கூட்டாக பிரகடனம் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.கொரிய தீபகற்பத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக சோசலிச வடகொரியாவை அழித்தொழிக்கும் நோக்கத்துடன் நவீன ஆயுதங்களால் குறி வைத்து முகாமிட்டிருக்கும் அமெரிக்காவை எதிர்கொள்ள, சமீப ஆண்டுகளாக வடகொரிய அரசு அணு சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியது. வடகொரியாவும் ஒரு அணுசக்தி வல்லமை கொண்ட நாடாக மாறியதை தொடர்ந்து வடகொரியா தொடர்பான அமெரிக்க ஏகாதிபத்திய அரசின் அணுகுமுறையும் வேறு வழியின்றி மாறியிருக்கிறது. வடகொரியா தனது அணு ஆயுதங்களையும் அது தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் கைவிட வேண்டுமென்றும் முதலில் மிரட்டிப் பார்த்தது.
பின்னர் வேண்டுகோள் விடுத்தது. சீனா மூலமாகவும் பேசிப்பார்த்தது. இந்நிலையில் கொரிய தீபகற்பத்தில் தன்னை முற்றுகையிட்டுள்ள அமெரிக்கப் படைகள் நிரந்தரமாக வாபஸ் பெறப்பட வேண்டும்; 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் பொருளாதார தடைகள் ரத்து செய்யப்பட்டு வடகொரியா மீதான அனைத்து அராஜகங்களும் அமெரிக்காவால் கைவிடப்பட வேண்டும்; அப்படிச் செய்தால் தானும் அணு ஆயுதங்களை கைவிடத் தயார் என்று வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோன் உன் அறிவித்தார். அறிவித்தது மட்டுமின்றி அணு ஆயுதங்களை கைவிடும் நடவடிக்கைகளையும் அவர் துவக்கி வைத்தார்.அணு ஆயுதப்பரவலை தடை செய்து உலகை அணு ஆயுதம் இல்லாத பூமியாக மாற்றும் மாபெரும் லட்சியத்திற்கு தனது இந்தச் செயலின் மூலம் துணை நிற்பதையும், வடகொரியாவின் நோக்கம் அமைதிதானே தவிர அழிவு அல்ல என்பதை பறைசாற்றும் விதமாகவும் கிம் ஜோன் உன்னின் செயல்பாடு அமைந்தது. இது அமெரிக்க நிர்வாகத்திற்கு நெருக்கடியை கொடுத்தது. இந்தப் பின்னணியிலேயே வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயார் என்று அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் டிரம்ப்க்கு ஏற்பட்டது.
இரு தலைவர்களும் சந்திப்பது என்று முடிவான பிறகும் கூட அமெரிக்கா நிர்வாகத்திடம் செல்வாக்கு செலுத்தும் தீவிர வலதுசாரி பாசிச சக்திகள் மீண்டும் மீண்டும் வடகொரியாவை அழிக்க வேண்டுமென்றும் பேச்சுவார்த்தையில் வைத்தே கிம் ஜோங் உன்னை கொல்ல வேண்டுமென்றும் கூட திட்டமிட்டு வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பி விட்டன. இந்நிலையில் பேச்சுவார்த்தை திட்டம் அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்டது. டிரம்ப்பும் கூட வடகொரியாவை தற்போது வரை மிரட்டிக்கொண்டேயிருந்தார்.
எனினும் கிம் ஜோங் உன் மற்றும் சீனாவின் ராஜிய ரீதியான நடவடிக்கைகள், இனியும் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொள்ளாமல் இழுத்தடிக்க முடியாது என்ற நிர்ப்பந்தத்தை அமெரிக்காவுக்கு ஏற்படுத்தின. இந்த பின்னணியில் சிங்கப்பூரில் வைத்து ஜூன் 12 அன்று அமைதி பேச்சுவார்த்தை நடத்தலாம் என முடிவு எட்டப்பட்டுள்ள செய்தி வெளியாகியிருக்கிறது. பேச்சுவார்த்தையின் நிகழ்ச்சி நிரல் என்ன என்பது அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை.எனினும் இந்தப் பேச்சுவார்த்தை உலகின் மிகப்பெரும் அமைதி நிகழ்ச்சிகளில் ஒன்றாக வரலாற்றில் இடம் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.கொரிய தீபகற்பத்தில் இருந்து நிரந்தரமாக அமெரிக்காவின் ஒட்டுமொத்த படைகளையும் வாபஸ் பெறுவது, தென்கொரிய மற்றும் ஜப்பானில் மிரட்டல்களை நிறுத்துவது, அனைத்து தரப்புகளும் முற்றாக அணு ஆயுதங்களை கைவிடுவது, நிரந்தரமாக அமைதி பிரதேசமாக மாற்றுவது ஆகியவையே இந்த பேச்சுவார்த்தையின் பிரதான அம்சங்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் தற்போதும் கூட அமெரிக்காவின் தீவிர வலதுசாரி சக்திகள் இந்த பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் நோக்கத்துடன் பேசியும் அறிக்கை விடுத்து வருகிறார்கள். அதையும் மீறி பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடைபெற வேண்டுமென வடகொரியா விரும்புகிறது. ஆனால் பேச்சுவார்த்தைக்கு வருவதே வடகொரியாவின் வீழ்ச்சிதான் என்று அமெரிக்க ஆளும் வர்க்கங்கள் கருதுமானால் அது அவர்களது முட்டாள்தனமான சிந்தனையே என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இந்தப் பேச்சுவார்த்தையில் நிச்சயம் மிக முக்கியமான ஆக்கப்பூர்வமான பங்கினை ஆற்றுவோம் என ஏற்கெனவே சீனா அறிவித்துள்ளது. கொரிய தீபகற்பத்தின் அமைதியை தவிர வேறெதுவும் இந்தப் பேச்சுவார்த்தையில் முக்கியமில்லை என்று சீனா அறிவித்துள்ளது.