அமெரிக்கா-வடகொரியா ஆதரித்து பூரி கடற்கரையில் மணல் ஓவியம்..!
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்களின் மனங்களிலும் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார்.
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்த சர்வதேச மணற்சிற்ப போட்டியில் சுதர்சன் பட்நாயக் தங்கப் பதக்கத்தை வென்று தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
இதுவரை 50-க்கும் மேற்பட்ட சர்வதேச மணற்சிற்ப போட்டிகளில் கலந்து கொண்டுள்ள சுதர்சன் பட்நாயக் இந்தியாவிற்காக பல விருதுகளை பெற்று தந்துள்ளதும், இந்த சாதனைக்காக இவருக்கு சென்ற 2014-ம் ஆண்டு நாட்டின் 4-வது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை வழங்கி மத்திய அரசு கவுரவித்திருந்ததும் நினைவிருக்கலாம்.
இந்நிலையில், வடகொரியாவும் அமெரிக்காவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. சீனா மற்றும் தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார். இரு நாட்டு தலைவர்களும் சிங்கப்பூரில் இன்று சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதையடுத்து, வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையேயான ஒப்பந்தத்தை ஆதரிக்கும் வகையில் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் மணற்சிற்பம் வரைந்துள்ளார். அதில் இனி அமைதி நிலவும் என்ற வாக்கியத்துடன் டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன்னின் முகத்தை சிற்பமாக வடித்துள்ளார். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.