அடுத்த யுத்தம் ஈரானில்…?
ஈரான் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும், பொருட்களின் விலை அதிகரிப்பும் நாடளாவிய ஆர்ப்பாட்டங்களை தூண்டி விட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் வங்கிகளையும், அரசு அலுவலகங்களையும் தாக்கியுள்ளனர். இன்று வரையில் இருபது பேர் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகியுள்ளனர்.
இறுதிக் கட்டத்தில் ஈரானிய அரசும் சில விட்டுக் கொடுப்புகளை செய்தது. உதாரணத்திற்கு, இனிமேல் முக்காடு போடாத பெண்களை கைது செய்வதில்லை என்று அறிவித்தது. ஆனால், அது மிகவும் காலதாமதமான முடிவு. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத வரையில் ஆர்ப்பாட்டங்கள் ஓயப் போவதில்லை.
இதற்கிடையே குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கும் அமெரிக்காவும், ஈரானுக்கு “எச்சரிக்கைகள்” விட்டுக் கொண்டிருக்கிறது. அதன் அர்த்தம், இந்த வருடம் ஈரானிலும் ஒரு உள்நாட்டுப் போர் வெடிக்கலாம். அதற்குத் தயாராக பல சக்திகள் உள்ளன. வடக்கே குர்தியரும், தெற்கே அரேபியரும் தமது தேசிய விடுதலைப் போராட்டத்தை தீவிரப் படுத்தலாம். அதை விட ஈராக்கில் தளமமைத்துள்ள முஜாகிதீன் கால்க் இயக்கம், அமெரிக்கா உதவினால் ஈரானுக்கு சென்று போரிடத் தயாராக உள்ளது.
முஜாகிதீன் கால்க், ஈரானில் மட்டுமல்லாது, அமெரிக்காவிலும் பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யப் பட்டிருந்தது. அது முன்னர் ஒரு மார்க்சிய – இஸ்லாமியவாத இயக்கமாக இருந்தது. கடந்த இரு தசாப்த காலமாக, மார்க்சியத்தை விட இஸ்லாமியவாதத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. ஆகவே, இன்றுள்ள நிலையில் ஈரானில் ஒரு திடீர் சதிப்புரட்சி அல்லது ஆட்சிக்கவிழ்ப்பு நடந்தால், அடுத்து வரப் போகிறவர்களும் இஸ்லாமியவாதிகளாகவே இருப்பார்கள்.