ரூ.540 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கழிவறைகளை காணவில்லை.! அரசு அதிகாரிகள் அதிர்ச்சி.!

  • மத்திய பிரதேசம் மாநிலத்தில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.540 கோடி மதிப்பில் கட்டப்பட்டதாக கூறப்படும் கழிப்பறைகள், உண்மையில் கட்டப்படாத என சோதனை செய்தபோது அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கடந்த 2012-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கழிவறைகள் இல்லாத 62 லட்சத்துக்கும் மேற்பட்ட வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்காக மத்திய அரசு ரூ.540 கோடி நிதி வழங்கியதை அடுத்து, பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிவறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. பின்னர் 2012 முதல் 2018-ம் ஆண்டு வரை சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட கழிவறைகள் கட்டித் தரப்பட்டுள்ளதாக தெரிவித்த அதிகாரிகள், இதற்கான புகைப்பட ஆதாரங்களை சமர்ப்பித்ததுடன், பயனாளர்களுக்கு தலா ரூ.12,000 கொடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கட்டப்பட்ட கழிவறைகளை பார்ப்பதற்காக வந்த அதிகாரிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். கழிவறைகளை கட்டியதாக கணக்கு காட்டி, கட்டப்படாத கழிவறைக்கு செலவு செய்யப்பட்டதாக பதிவேட்டில் பதிவு செய்துவிட்டு, அந்த பணத்தை வேறு ஒரு பயன்பாட்டுக்குச் செலவழிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக மக்கள் கேள்வி எழுப்பியது தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அடுத்தடுத்து புகார் எழுந்ததால் தீவிர விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகள், அரசுப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாக ஒருவரை கைது செய்து, அவரிடமிருந்து 7 லட்சத்தை கைப்பற்றியுள்ளனர்.

பின்னர் கழிவறைகள் அனைத்தும் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டதா என தெரிந்துகொள்ள 2,000 தன்னார்வலர்களை வைத்து சோதனை நடத்திய பிறகுதான் தெரியவந்தது என தூய்மை இந்தியா திட்டத்தின் மத்தியப்பிரதேச துணை இயக்குநர் அஜித் திவாரி தெரிவித்தார். மேலும்  மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை அரசுகள் கொண்டு வந்தாலும், அது நேர்மையற்ற அதிகாரிகளால் ஊழலும், மோசடியும் நடந்து வருகிறது, இதுபோன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்