பொறியியல் பணிகளுக்கான தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும்! விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள்!

தென்மாவட்டங்களில் இயற்கை பேரிடர் காரணமாக த.நா.பொதுத் தேர்வாணையம் நடத்தும் பொறியியல் பணிகளுக்கான தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியதாவது ” தமிழ்நாடு பொதுத் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வரும் ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடத்தவுள்ள பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என்று விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் 16, 17ஆகிய நாட்களில் கடும்புயல், பேய்மழை மற்றும் பெருவெள்ளம் ஆகிய இயற்கை பேரிடரால் மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாகப் பதிக்கப்பட்டுள்ளது. இன்னும் அதில் இருந்து மக்களால் மீண்டுவர இயலவில்லை. இந்த சூழலில் த.நா.பொதுத் தேர்வாணையம் ஜனவரி 6, 7 அன்று ‘ஒருங்கிணைந்த பொறியியல் பணியிடங்களை’ நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளை நடத்தவுள்ளது.

பிரதமர் மோடியை இன்று டெல்லியில் சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

இத்தேர்வுகளைச் சிறப்புற எழுதுவதற்குப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ஏதுவான சூழல் இல்லை. எனவே, தமிழ்நாடு அரசு இத்தேர்வினை இன்னும் சில வாரங்களுக்குப் பின்னர் நடத்தும் வகையில் தள்ளி வைக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சார்ந்த விண்ணப்பதாரர்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி) நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த போட்டித் தேர்வுகளை இதே காரணங்களை முன்னிட்டு பிப்ரவரி மாதத்திற்குத் தள்ளிவைத்து அறிவிப்பு செய்துள்ளது. அதேபோல, தமிழ்நாடு பொதுத் தேர்வாணையமும் ஒருங்கிணைந்த பொறியியல் பணியாளர்களுக்கான தேர்வுகளைத் தள்ளிவைத்திட முன்வருமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.