“ப்ராஜெக்ட் மாவேன்” நிறுத்துமாறு கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கு கடிதம் எழுதியது யார்..?
உலகின் மிகப்பெரிய தேடுபொறி நிறுவனமான கூகுள், கடந்த ஒரு மாத காலமாக அமெரிக்க பாதுகாப்பு துறையுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. இந்த கூட்டணியானது, யுத்த களங்களில் செயல்படும் (போரிடும்) ட்ரோன் மென்பொருள் உருவாக்கத்திற்காக பணியாற்றி வருகிறது.
ப்ராஜெக்ட் மாவென் (Maven) என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரி, கூகுள் ஊழியர்கள் கையொப்பமிட்ட கடிதம் ஒன்று, கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், கூகுள் நிறுவனமானது ப்ராஜெக்ட் மாவேன் எனப்படும் “போர் வணிகத்தை” மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதோடு சேர்த்து, மாவேன் திட்டத்துடன் அவர்கள் தொடர்பு கொள்ள விருப்பவில்லை என்பதையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
ப்ராஜெக்ட் மாவேன் என்பது, ஒரு ட்ரோனின் வீடியோ பதிவுகளை கம்ப்யூட்டர் விஷன் அல்காரிதம் கொண்டு பகுப்பாய்வு செய்யும் ஒரு ஆராய்ச்சி முன்முயற்சியாகும். அதாவது இராணுவத்தின் வழியாக சேகரிக்கப்பட்ட மில்லியன் கணக்கான மணி நேர ட்ரோன் வீடியோ காட்சிகளை ஸ்கேன் செய்து, அதன் வழியாக தேடப்படும் நபர்கள் அல்லது பொருட்களை அடையாளம் காண உதவுவது தான் இந்த ப்ராஜெக்ட் மாவேன். இதை நிகழ்த்த கூகுளின் டென்ஸார்ப்ளோ (TensorFlow) மென்பொருள் மற்றும் இமேஜ்-ரிக்கனைசேஷன் அல்காரிதம் போன்றவைகள் பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சுந்தர் பிச்சைக்கு கொடுக்கப்பட்டுள்ள கடிதத்தில் “நிலை இல்லாத மற்றும் ஒரு ஆயுத சக்தியாக உருமாறுவரும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அச்சத்தினால், கூகுள் நிறுவனம் ஏற்கனவே பொதுமக்களின் நம்பிக்கையை காப்பாற்றிக்கொள்ள திணறி வருகிறது. மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் போன்ற மற்ற நிறுவனங்கள் இதுபோன்ற திட்டங்களில் பங்குகொள்வதால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை, ஆனால் கூகுள் அப்படியில்லை. கூகுள் ஒரு தனித்துவமான வரலாற்றை” கொண்டுள்ளது, அதன் பிரதான குறிக்கோளே ‘தீங்குங்களை விளைவிக்காதே” (Don’t Be Evil) என்பது தான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தினால் (ப்ராஜெக்ட் மாவென்) எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படாது என்று கூகுள் நிறுவனத்தின் க்ளவுட் ஆப்ரேஷன் தலைவரான டீன் கிரீன் ஏற்கனவே விவரித்துள்ள நிலைப்பாட்டில், கூகுள் ஊழியர்கள், தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சைக்கு அனுப்பியுள்ள இந்த கடிதம், ப்ராஜெக்ட் மாவேன் என்ற பிரச்சனையின் திவீரத்தை அதிகமாகியுள்ளது.
இந்த கடிதம் சார்ந்த விளக்கத்தை அளித்த கூகுள் செய்தித் தொடர்பாளர் “மேவன் என்பது நன்கு அறியப்பட்ட டிஓடி (DoD) திட்டமாகும். அதில் கூகுள் ஒரு பகுதியாக செயல்படுகிறது – குறிப்பாக, தாக்குதல் இல்லாத நோக்கங்களுக்காக பணியாற்றுகிறது. இதற்காக எந்தவொரு கூகுள் க்ளவுட் வாடிக்கையாளர்களுக்கும் அணுக கிடைக்கும் ஓப்பன்-சோர்ஸ் ஆப்ஜெக்ட்-ரிக்கனைசேஷன் மென்பொருள் தான் பயன்படுத்தப்படுகிறது” என்று விளக்கம் அளித்துள்ளார்.