Whatsapp: வீடியோ மெசேஜ் முதல் ஸ்கிரீன் ஷேரிங் வரை.! வாட்ஸ்அப் அறிமுகப்படுத்திய அட்டகாசமான அம்சங்கள்.!

WhatsappMessageEdit

உலகில் இருக்கும் ஆன்ட்ராய்டு பயனர்கள் முதல் ஐஓஎஸ் பயனர்கள் வரை, மெட்டா நிறுவனத்தின்  செய்தி அனுப்பும் செயலியான வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் மக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு சேட் செய்வது மட்டுமல்லாமல், நினைவுகளை பரிமாறிக்கொள்வதற்காக வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.

அதோடு குரூப் சேட், குரூப் கால் உட்பட பணப் பரிமாற்றத்தையும் மேற்கொள்ளலாம். இதனை இன்னும் மேம்படுத்தும் விதமாக, மெட்டா நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை வெளியிடுகிறது. அந்த அப்டேட்கள் பயனர்களுக்கு எதிர்பார்க்கும் வகையிலும், அவர்களுக்கு பயன்படும் வகையிலும் உள்ளது. குறிப்பாக, பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் அப்டேட்களை அள்ளித் தருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் பல புதிய அப்டேட்களை வெளியிட்டது. அதில் வீடியோ மெசேஜ், சைலன்ஸ் அன்நோன் நம்பர்ஸ், குரூப் வீடியோ கால், மெசேஜ் எடிட், வாய்ஸ் சேட், ஸ்கிரீன் ஷேரிங் போன்ற அம்சங்கள் அடங்கும்.

வீடியோ மெசேஜ்:

இந்த வீடியோ மெசேஜ் அம்சம் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்புவது போல குறுகிய அளவிலான வீடியோ மெசேஜை அனுப்பலாம். இதில் 60 வினாடிகள் வரையிலான வீடியோவை பகிர்ந்து கொள்ள முடியும். இந்த வசதியைப் பயன்படுத்த வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் பட்டனை கிளிக் செய்து வீடியோ பதிவு செய்யும் அம்சத்திற்கு மாற்ற வேண்டும். பிறகு அதனை அழுத்திப்பிடித்து வீடியோ எடுக்கவேண்டும். இந்த அம்சம் அறிமுகமாவதற்கு முன்னதாகவே  நெட்டிசன்கள் பலரும் இதை வேறு எங்கோ பார்த்திருப்பதாக தெரிவித்து, டெலிக்ராமில் இருக்கும் அதே அம்சத்துடன் ஒப்பிட்டு பேசினர்.

சைலன்ஸ் அன்நோன் நம்பர்ஸ்:

பயனர்கள் பலர் தங்களது வாட்ஸ்அப் எண்ணுக்கு தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வருவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து மெட்டா நிறுவனம் இந்த அப்டேட்டை வெளியிட்டது. இதனால் நம் சேமித்து வைத்திருக்கும் தொடர்பு எண்கள் தவிர வேறு யாராவது வாட்ஸ்அப்பில் அழைத்தால் அது நமக்கு தொந்தரவை ஏற்படுத்தாதவாறு அதனை நாம் சைலன்ஸ் மோடில் வைத்துக்கொள்ளலாம். இதை செயல்படுத்த நமது வாட்ஸ்அப்பில் பிரைவசி அமைப்புகளில் உள்ள அழைப்புகளில் சைலன்ஸ் அன்நோன் நம்பர்ஸ் என்பதை தேர்வு செய்யவேண்டும். இந்த அம்சம் இப்போது வரை பலருக்கும் உதவியாக இருந்து வருகிறது.

குரூப் வீடியோ கால்:

குரூப் வீடியோ கால் என்பது இருந்தாலும் அதில் ஒரு சிலரே ஒரே நேரத்தில் பேச முடியும். ஆனால் இந்த அம்சம் மூலம் பயனர்கள் 32 நபர்களுடன் ஒரே நேரத்தில் வீடியோ கால் செய்ய முடியும். முன்னதாக, 8 பேர் வரையிலான குரூப் வீடியோ கால், 32 பேர் வரையிலான ஆடியோ கால் செய்யமுடியும். ஆனால், இதன்மூலம் 32 பேர் ஓரே நேரத்தில் குரூப் வீடியோ காலில் முடியும். தற்பொழுது இந்த அம்சம் பீட்டா பயனாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

மெசேஜ் எடிட்:

பயனர்கள் அனைவரும் மிகவும் எதிர்ப்பார்த்த மெசேஜ் எடிட் செய்யும் அம்சத்தை மெட்டா அறிமுகப்படுத்தியது. இதனால் வாட்ஸ்அப்பில் அனுப்பும் செய்திகளை எடிட் செய்ய முடியும். அதாவது நீங்கள் உங்கள் நண்பருக்கு அனுப்பிய செய்தியில் எழுத்துப்பிழை இருந்தால் அதனை சரி செய்யலாம் அல்லது அந்த செய்தியில் கூடுதல் தகவலை சேர்க்கலாம். இதன்மூலம் தவறாக அனுப்பிய செய்தியை அடுத்த 15 நிமிடத்துக்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் திருத்திக்கொள்ளலாம். ஆனால் வேறு சாதனத்திலிருந்து அனுப்பப்பட்ட செய்தியை உங்களால் திருத்த முடியாது. இந்த அம்சம் இப்போது அனைத்து பயனர்களுக்கு கிடைக்கிறது.

வாய்ஸ் சேட்:

வாய்ஸ் சேட் அம்சம் மூலம் வாட்ஸ்அப் குரூப்பில் இருப்பவர்கள் மெசேஜ் ஏதும் அனுப்பாமல், வாய்ஸ் கால் செய்யாமல் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள முடியும். குரூப்பில் இருக்கும் நபரால் தொடங்கப்படும் இந்த வாய்ஸ் சேட் குறித்து நோட்டிபிகேஷன் ஆனது அனுப்பப்படும். இந்த வாய்ஸ் சேட்டைத் தொடங்க குழுவின் பெயருக்கு அருகில் இருக்கும் அலை போன்ற ஐகானை கிளிக் செய்ய வேண்டும். அதன்பிறகு குரூப்பில் இருக்கும் எந்த ஒரு நபரும் எப்போது வேண்டுமானாலும் சேர்ந்து பேசலாம். இதில் யாரும் சேரவில்லை என்றால் 60 நிமிடங்களுக்கு பிறகு தானாகவே முடிந்துவிடும். இந்த அம்சம் பீட்டா பயனாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

ஸ்கிரீன் ஷேரிங்:

இந்த ஸ்க்ரீன் ஷேரிங் வசதி மூலம் கூகுள் மீட் மற்றும் ஜூம் போன்ற வீடியோ கான்பரன்சிங் தளங்களில் இருப்பது போல் உங்களது ஸ்கிரீன்களை ஷேர் செய்ய முடியும். இதற்கு நீங்கள் வீடியோ கால் செய்யும் பொழுது, திரையின் அடிப்பகுதியில், அம்புக்குறியுடன் கூடிய ஸ்கிரீன் ஷேரிங் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். அதன் பின், நீங்கள் காண்பிக்க நினைக்கும் திரையை தேர்ந்தெடுக்கவும். அவ்வாறு செய்யும் பொழுது உங்கள் திரையில் தெரிவதை, உங்களுடன் வீடியோ காலில் இருக்கும் நபரும் பார்க்க முடியும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்