கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பயனர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தி, பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் பல புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ‘சாட் லாக்’ மற்றும் சாட் லாக்கிற்கான ‘சீக்ரெட் கோட்’ போன்றவற்றை அறிமுகம் செய்தது. இதற்கிடையில், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கான ‘வியூ ஒன்ஸ்’ (View Once) என்ற அம்சத்தையும் அறிமுகப்படுத்தியது.
இந்த அம்சத்தினால் நீங்கள் அனுப்பும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும். அதேபோல இந்த புகைப்படங்களை மொபைலில் சேமித்து வைக்கவோ அல்லது ஸ்கிரீன்ஷாட் எடுக்கவோ முடியாது. இப்போது இதே அம்சத்தை வாட்ஸ்அப் பயனர்களின் வாய்ஸ் மெசேஜ் அமைப்பிலும் செயல்படுத்தி உள்ளது. இதனால் பயனர்கள் தங்கள் வாய்ஸ் மெசேஜையும் ஒருமுறை மட்டுமே கேட்கும்படி செட் செய்து அனுப்ப முடியும்.
அந்த வாய்ஸ் மெசேஜை நீங்கள் கேட்டவுடன், அதை மீண்டும் கேட்க முடியாது. இதன் மூலம் நீங்கள் தவறுதலாக யாருக்காவது வாய்ஸ் மெசேஜ் அனுப்பி விட்டீர்கள் என்றால் இனிமேல் எந்த கவலையும் இல்லாமல் இருக்கலாம். வாட்ஸ்அப்பில் உங்கள் சாட்டுகள் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்படுவது போலவே, இந்த வாய்ஸ் சாட்டுகளும் பாதுகாக்கப்படும்.
அதாவது இந்த வாய்ஸ் மெசேஜை நீங்களும், நீங்கள் அனுப்பும் நபரும் மட்டுமே கேட்க முடியும். இந்த வாய்ஸ் மெசேஜ்களுக்கான வியூ ஒன்ஸ் அம்சம் குறிப்பிட்ட பீட்டா பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. மேலும், வரும் நாட்களில் உலக அளவில் வெளியாகும் என்று வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.
இந்த அம்சத்தை எவ்வாறு செயப்படுத்துவது.?
- இந்த அம்சத்தை செயல்படுத்த முதலில் நீங்கள் யாருக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்ப போகிறீர்களோ அந்த சேட்டை ஓபன் செய்ய வேண்டும்.
- இதன் பிறகு வழக்கம் போல வாய்ஸ் மெசேஜை கிளிக் செய்து, மேலே இழுத்து லாக் செய்யவும்.
- இதன் பிறகு அதில் வியூ ஒன்ஸ் என்பதற்கான ஆப்ஷன் காட்டும்.
- அதனை கிளிக் செய்து வாய்ஸ் மெசேஜை சென்ட் செய்ய வேண்டும்.
- இவ்வாறு செய்யும் பொழுது உங்கள் வாய்ஸ் மெசேஜை ஒருமுறை மட்டுமே கேட்க முடியும்.