UPI: ஒரே மாதத்தில் 10 பில்லியன் பரிவர்த்தனைகள்.! டிஜிட்டல் இந்தியாவிற்கு மிகப்பெரிய சாதனை..!
இது ஒட்டுமொத்த உலக மக்கள்தொகையை விட தோராயமாக 2 பில்லியன் அதிகம். இந்தியாவில் நடக்கும் அனைத்து சில்லறை டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 75 சதவீதத்திற்கும் மேல் யுபிஐ பரிவர்த்தனை உள்ளது. இது சுமார் 330 மில்லியன் தனிப்பட்ட பயனர்களைக் கொண்டுள்ளது.
70 மில்லியனுக்கும் அதிகமான வணிகர்கள் 256 மில்லியன் க்யூஆர் (QR) குறியீடுகளைப் பயன்படுத்தி யுபிஐயைப் பயன்படுத்துகின்றனர். இந்த யுபிஐ பயன்பாடுகளின் பட்டியலில் போன்பே, கூகுள்பே மற்றும் பேடிஎம் போன்ற பரிவர்த்தனை செயலிகள் முன்னணியில் உள்ளன. ஜூலை மாதத்தில், யுபிஐ மூலம் 9.96 பில்லியன் பரிவர்த்தனைகள் நடந்துள்ளது. இது ஆகஸ்ட் மாதத்தில் 10 பில்லியனைத் தாண்டியுள்ளது.
இது இந்தியாவிற்கு மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த சாதனையை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) வெளியிட்ட பதிவிற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, இது ஒரு விதிவிலக்கான செய்தி என்று கூறியுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, “இது ஒரு விதிவிலக்கான செய்தி. இது இந்திய மக்கள் டிஜிட்டல் முன்னேற்றத்தைத் தழுவியதற்கு இது ஒரு சான்றாகவும், அவர்களின் திறமைக்குக் கிடைத்த மரியாதையாகவும் உள்ளது. இதே போன்ற நிலை எதிர்காலத்திலும் தொடரும்” என்று அவர் கூறியுள்ளார்.