மத்திய அமைச்சரவை ஒப்புதல்… இனி நாடு முழுவதும் 4G/5G சேவைகளை வழங்கும் பிஎஸ்என்எல்.!
4ஜி/5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு மத்திய அமைச்சரவை பிஎஸ்என்எல்-க்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இறுதியாக பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி மற்றும் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் இனி அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், நுகர்வோர்களுக்கு தரமான சேவையில் மட்டுமல்லாமல், மலிவு விலையில் அழைப்புகள் மற்றும் டேட்டா திட்டத்தையும் வழங்கும்.
மத்திய அமைச்சரவையின் இந்த ஒப்புதலுக்கு பிறகு பிஎஸ்என்எல் இந்தியா முழுவதும் 4G மற்றும் 5G சேவைகளை வழங்க அனுமதிக்கும் என்று அமைச்சரவை கூறுகிறது. இந்தியாவில் 4G விரிவாக இயக்கும் ரூ.15,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் BSNL மற்றும் டிசிஎஸ்(TCS) இடையே கையெழுத்திட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் 4ஜி மற்றும் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பை, பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ(PIB) வெளியிட்டுள்ளது. 4G மற்றும் 5G அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்கு, 89,047 கோடி மதிப்பில் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இது முக்கியமாக BSNL 4G ஐ முக்கிய நகரங்கள் மற்றும் தொலைதூர மூலைமுடுக்குகளிலும் சென்று பலனளிக்கும்.