Ulefone Armor 24: இனி இடைவிடாத சாகசம்..! 22 ஆயிரம் mAh பேட்டரி, முரட்டுத்தனமான லுக்கில் ஆர்மர் 24 ஸ்மார்ட்போன்.!

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான உலேஃபோன் (Ulefone), முரட்டுத்தனமான உலேஃபோன் ஆர்மர் 24 (Ulefone Armor 24) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை விட, தொழில்துறையில் தனித்து நிற்கும் புதுமையான முரட்டுத்தனமான ஸ்மார்ட்போன் ஆகும்.
இந்த ஸ்மார்ட்போன் உலகெங்கிலும் உள்ள சிறந்த மற்றும் அசல் வடிவமைப்பு வேலைகளை அங்கீகரிப்பதற்கான முஸ் வடிவமைப்பு விருதுகள் (MUSE) 2023 என்ற ஒரு சர்வதேச வடிவமைப்பு போட்டியில் வெற்றியாளராக உள்ளது. இதன் கண்ணைக் கவரும் டிசைன் மற்றும் முரட்டுத்தனமான வடிவமைப்பு இதை தனித்து நிற்க வைக்கிறது.
சந்தைகளில் இருக்கும் மற்ற ஸ்மார்ட்போன்களில் இருந்து தனித்துவமாக இருக்கும் வகையில், 22,000mAh பேட்டரி மற்றும் பெரிய எல்இடி லைட் போன்ற சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.
டிஸ்பிளே:
இந்த முரட்டு தனமான ஸ்மார்ட்போனில் 1080 x 2460 பிக்சல் ஹை-ரெசல்யூஷன் கொண்ட 6.78 இன்ச் அளவுள்ள எஃப்எச்டி+ எல்சிடி டிஸ்பிளே உள்ளது. ஐபிஎஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. 647 கிராம் எடையுள்ள இந்த முரட்டுத்தனமான ஸ்மார்ட்போனில், டிஸ்பிளே பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 உள்ளது. ஸ்பிளாஸ், நீர் மற்றும் தூசி எதிர்ப்புக்கான ஐபி68 ரேட்டிங் உள்ளது. இதனால் இந்த ஸ்மார்ட்போனை 1.5மீட்டர் ஆழத்தில் அதிகபட்சமாக 30 நிமிடங்கள் வரை நீருக்கு அடியில் வைத்திருக்க முடியும்.
பிராசஸர் மற்றும் சென்சார்:
இதில் மீடியாடெக் எம்டி6781 சிபியு உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ ஜி96 ஆக்டா கோர் பிராசஸர் உள்ளது. இதனுடன் ஆர்ம் மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு இணைக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 13 மூலம் இயக்கப்படுகிறது. இதில் ப்ராக்ஸிமிட்டி சென்சார், கிராவிட்டி சென்சார், லைட் சென்சார், ஆக்சிலரேஷன் சென்சார், ஜியோமேக்னடிக் சென்சார், கைரோ சென்சார், பெடோமீட்டர், இன்ஃப்ராரெட் சென்சார் உள்ளது. இதில் பின்புறம் 1000 லுமன்ஸ் வரை வெளிச்சத்தைத் தரக்கூடிய சக்திவாய்ந்த எல்இடி லைட் உள்ளது. இந்த வெளிச்சம் 200 மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட தூரத்தை அடையும் அளவுக்கு சக்தி வாய்ந்தது.
கேமரா:
ஆர்மர் 24 ஸ்மார்ட்போனின் கேமரா அமைப்பைப் பொறுத்த வரை, 64எம்பி வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 64எம்பி நைட் விஷன் கேமரா என டபுள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இதில் வைட் ஆங்கிள் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்686 சென்சாரும், நைட் விஷன் கேமராவில் ஓவி64பி சென்சாரும் உள்ளது.
இதில் 2k வரையிலான தெளிவுத்திறன் கொண்ட வீடீயோவைப் பதிவு செய்யலாம். நைட் விஷன் மோட், ஃபிலிம் மோட், 64எம்பி மோட், நைட் மோட், ஜிஃப், போர்ட்ரெய்ட், ப்ரோ மோட் போன்ற புகைப்பட அம்சங்கள் உள்ளன. அதோடு, முன்புறம் தெளிவான செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 16 எம்பி எஸ்5கே3பி8 சென்சார் கொண்ட கேமரா உள்ளது. இந்த ஸ்மார்போனில் நீருக்கடியில் கூட புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க முடியும்.
பேட்டரி:
இதில் முக்கிய மற்றும் சிறப்பான அம்சம் பேட்டரி தான். ஏனென்றால் ஆர்மர் 24 ஸ்மார்ட்போனில் 22,000mAh திறன் கொண்ட பெரிய லித்தியம்-அயன் பாலிமர் பேட்டரி உள்ளது. இதை வேகமாக சார்ஜ் செய்ய 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுள்ளது. இதில் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால் ரிவெர்ஸ் சார்ஜிங் செய்ய முடியும்.
அதாவது இந்த ஸ்மார்ட்போனில் இருந்து இன்னொரு ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய முடியும். இந்த அம்சத்தில் 10 வாட்ஸ் ரிவெர்ஸ் சார்ஜிங் வசதி உள்ளது. இதனை பவர் பேங்க் ஆக பயன்படுத்த முடியும். இந்த பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வைய பயன்படுத்த முடியும். இதில் யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் உள்ளது.
ஸ்டோரேஜ் மற்றும் விலை:
இந்த உலேஃபோன் ஆர்மர் 24 ஸ்மார்ட்போன் ஆனது 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இதில் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 2 டிபி வரை உயர்த்திக் கொள்ள முடியும். இந்த ஆர்மர் 24 ஸ்மார்ட்போன் அலிஎக்ஸ்பிரஸ் இணையதளத்தில் ரூ.34,401 என்ற விலையில் விற்பனைக்கு உள்ளது. ஆனால், இதன் உறுதிப்படுத்தப்பட்ட விலை உலேஃபோன் தெரிவிக்கவில்லை. ஆனால், இந்த ஆர்மர் வரிசையில் உள்ள ஆர்மர் 22 ஸ்மார்ட்போனின் விலையிலிருந்து கிட்டத்தட்ட ரூ.15,000 அதிகமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆர்மர் 22 ஸ்மார்ட்போனின் விலை 219.99 டாலர் (கிட்டத்தட்ட ரூ.18,276) என்பது குறிப்பிடத்தக்கது.