ஒரே போனில் இரண்டு கணக்குகள்..! விரைவில் அறிமுகமாகும் வாட்ஸ்அப்பின் அசத்தல் அம்சம்..!
வாட்ஸ்அப் நிறுவனம் ஒரே கணக்கை பல தொலைபேசிகளில் பயன்படுத்தும் புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது.
உலகில் உள்ள மக்கள் அனைவரும் வாட்ஸ்அப் செயலி மற்றும் இணையதளத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் சாட் செய்வது மட்டுமல்லாமல் வீடியோக்கள் மற்றும் புகை படங்களை பகிர்ந்து கொள்வதோடு பண பரிமாற்றத்தையும் மேற்கொள்கின்றனர்.
மெட்டாவின் வாட்ஸ்அப், பயனர்களின் தேவைக்கேற்ப அவ்வப்போது புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்பொழுது பயனர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மல்டி அக்கவுண்ட் சப்போர்ட் எனப்படும் ஒரே மொபைலில் இரண்டு கணக்குகளை பயன்படுத்தும் அம்சத்தை கொண்டு வர உள்ளது.
முன்னதாக, ஒரு வாட்ஸ்அப் கணக்கை நான்கு சாதனங்களில் பயன்படுத்துவதற்கான அம்சத்தை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது இந்த அம்சம் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அம்சமானது முதலில் வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு சோதனைக்காக விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது இந்த அம்சம் சோதனையில் உள்ளதாக கூறப்படுகிறது
வெளியாகி உள்ள தகவலின்படி, வாட்ஸ்அப்பில் சேர்க்கப்பட்டுள்ள ஒரு புதிய மெனு மூலம் பயனர்கள் இரண்டு கணக்குகளை ஒரே சாதனத்தில் இணைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் பயனர்கள் தங்களது தனிப்பட்ட வாட்ஸ்அப் மற்றும் வேலைக்காக உபயோகப்படுத்தும் வாட்ஸ்அப் கணக்கு என இரண்டு கணக்குகளையும் ஒரே சாதனத்தில் வைத்துக் கொள்ள முடியும். இதனால் வேறு சில செயலிகளின் பயன்பாடுகளை நாம் தவிர்க்கலாம்.