நவீன உலகின் அடுத்தகட்டம்..! ஸ்ட்ரீமிங் அம்சத்துடன் அறிமுகமான மெட்டாவின் ஸ்மார்ட் கிளாஸ்.!
மெட்டாவின் வருடாந்திர கனெக்ட் மாநாடு செப்டம்பர் 27 மற்றும் 28 ஆகிய இரண்டு தேதிகளில் நடைபெறுகிறது. அதன்படி, நேற்றுத் கலிபோர்னியாவின் மென்லோ பூங்காவில் உள்ள அதன் தலைமையகத்தில் தொடங்கிய இந்த கனெக்ட் மாநாட்டில் மெட்டாவின் குவெஸ்ட் 3, ரே-பான் மெட்டா ஸ்மார்ட் கிளாஸ், சாட்போட்கள் மற்றும் பல ஏஐ தயாரிப்புகளை தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அறிமுகப்படுத்தினார்.
இதில், தற்போதைய நவீன உலகை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், புதிய ரே-பான் மெட்டா ஸ்மார்ட் கிளாஸ் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்கிளாஸை பிரான்ஸை தலைமையிடமாகக் கொண்ட ரே-பானின் தாய் நிறுவனமான எஸ்சிலர் லக்சோட்டிகா எனும் கண் கண்ணாடிகள் தயாரிக்கும் நிறுவனத்துடன் இணைந்து மெட்டா உருவாக்கியுள்ளது. இந்த எஸ்சிலர் லக்சோட்டிகா நிறுவனத்துடன் மெட்டா, கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கைக் கோர்த்தது.
கேமரா:
மெட்டாவின் ஹேண்ட்ஸ்-ஃப்ரீ சாதனமான ரே-பான் மெட்டா ஸ்மார்ட் கிளாஸ் ஆனது ஒரு சிறிய கேமராவுடன் வருகிறது. அதன்படி இந்த கண்ணாடி பிரேமில் 12 எம்பி அல்ட்ரா-வைட் கேமரா உள்ளது. இதன் மூலம் புகைப்படங்கள் மற்றும் 60 வினாடிகள் வரை 1080 பிக்ஸல் தெளிவுடன் கூடிய வீடீயோவை எடுக்க முடியும். எனவே நீங்கள் எங்காவது வெளியே செல்லும்போது கையில் மொபைல் போன் அல்லது கேமரா கொண்டு செல்லவில்லை என்றால், இந்த ஸ்மார்ட் கிளாஸை வைத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிக தெளிவுடன் எடுக்கலாம்.
மெட்டா ஏஐ:
மெட்டாவின் இந்த ஸ்மார்ட் கிளாஸில் மெட்டா ஏஐ உள்ளது. மேலும், இதில் இருக்கும் ஹே மெட்டா (Hey Meta) என்ற குரல் அம்சத்தின் மூலம் உரையாடலில் ஈடுபட முடியும். இது ஆங்கிலம், இத்தாலியன் மற்றும் பிரஞ்சு மொழிகளில் இந்த அம்சத்தைக் கொண்டுவந்துள்ளது. ஆனால், பயனர்கள் ஒரு நேரத்தில் ஒரு மொழியைப் பயன்படுத்தி மட்டுமே தொடர்பு கொள்ள முடியும்.
இதை வைத்து நீங்கள் புகைப்படத்தை கூட ஷேர் செய்யலாம். அதற்கு நீங்கள் ‘சென்ட் எ போட்டோ’ என்ற வாய்ஸ் கமெண்ட் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது கிளாஸிலிருந்து புகைப்படம் நேரடியாக உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு நேரடியாக சென்றடையும்.
ஆடியோ சிஸ்டம் மற்றும் பிராசஸர்:
இந்த கண்ணாடிகளில் தனிப்பட்ட ஆடியோ சிஸ்டம் உள்ளது. இது அணிபவருக்கு மட்டுமே கேட்கக்கூடிய ஆடியோ அனுபவத்தை வழங்கும். புதுப்பிக்கப்பட்ட இந்த ஸ்மார்ட் கிளாஸில் ஐந்து மைக்ரோஃபோன்கள் உள்ளன. ரே-பான் மெட்டா ஸ்மார்ட் கிளாஸ் புதிய குவால்காம் ஸ்னாப்டிராகன் ஏஆர்1 ஜென்1 பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது உயர்தர புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் திறனை மேம்படுத்தி, அதனை செயல்படுத்துகிறது.
பேட்டரி:
ரீசார்ஜ் செய்து பயன்படுத்தக்கூடிய ரே-பான் மெட்டா ஸ்மார்ட் கிளாஸை ஒரு முறை சார்ஜ் செய்தால் 4 மணிநேரம் வரை பயன்படுத்த முடியும். இதனை சார்ஜ் செய்ய ஒரு சார்ஜிங் கேஸும் உள்ளது. முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட கேஸில் 32 மணிநேரம் வரை சார்ஜ் இருக்கும். மேலும் இதில் வைஃபை 6, புளூடூத் 5.3 மற்றும் IPX4 வாட்டர் ரெசிஸ்டென்ஸ் உள்ளது.
லைவ்ஸ்ட்ரீமிங் மற்றும் மெட்டா வியூ ஆப்:
ரே-பான் மெட்டா ஸ்மார்ட் கிளாஸ் மூலம் பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமில் லைவ்ஸ்ட்ரீம் செய்யலாம். இதன் மூலம் நீங்கள் என்ன பார்கிறீர்களோ அதை ஸ்ட்ரீம் செய்ய முடியும். இதில் 30 30 நிமிடங்கள் வரை 720 எம்பி தெளிவுடன் 30 எஃப்பிஎஸ் வரை லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய முடியும். இந்த கண்ணாடியை பயன்படுத்தும் அனுபவத்தை மேம்படுத்த, உங்கள் ஸ்மார்ட்போனில் மெட்டா வியூ ஆப்பை பயன்படுத்தலாம்.
ஸ்டோரேஜ் மற்றும் விலை:
ஜீன்ஸ், ரெபெல் பிளாக் மற்றும் கேரமல் ஆகிய மூன்று புதிய வண்ணங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட் கிளாசில் 32ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது . இதனால் சுமார் 500 படங்கள் மற்றும் 30 வினாடிகள் அளவில் 100 வீடியோக்களை பதிவு செய்யலாம்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்கள் மெட்டா.காம் மற்றும் ரே-பான்.காம் இல் முன்கூட்டிய ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த கண்ணாடியின் ஆரம்ப விலையானது $299 (ரூ.24,868) ஆகும். ஆன்லைனில் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் இதன் விற்பனையானது அக்டோபர் 17 அன்று தொடங்கும் என்று மெட்டா தெரிவித்துள்ளது.