இந்தியாவில் ஐபோன் தயாரிப்பில் ஈடுபடும் டாடா குழுமம்.! அதிகாரபூர்வமாக அறிவித்த மத்திய அமைச்சர்.!
ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் ஐபோன்கள் என்றாலே ஒரு தனி எதிர்பார்ப்பு உண்டு. ஏனென்றால் ஐபோன்கள் பாதுகாப்பிலும், பிரிமியம் டிசைனிலும் கொஞ்சம் கூட குறை வைக்காது. இதனாலேயே அதன் விலை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அனைவரும் ஐபோன்களை வாங்கி பயன்படுத்த விரும்புகிறார்கள். இதனால் ஐபோன்கள் சீக்கிரமாக விறபனையாகிவிடுகின்றன.
எனவே ஆப்பிள் நிறுவனம் அவ்வப்போது புதிய அம்சங்களைப் புகுத்தி, பல மாடல்களில் ஐபோன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் 13ம் தேதி ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஐபோன்கள் இந்தியாவில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டவை ஆகும்.
ஏனென்றால் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களின் அளவை விரைவாக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியில் ஆப்பிள் நிறுவனம் அதன் 7% ஐபோன்களை இந்தியாவில் உற்பத்தி செய்தது. இந்த ஆண்டு இந்தியா மற்றும் சீனாவில் இருந்து ஏற்றுமதியை சமநிலைக்கு கொண்டு வருவதை ஆப்பிள் நோக்கமாக கொண்டுள்ளது.
இந்தியாவில் இருக்கும் சீனாவின் தைவானைச் சேர்ந்த வின்ஸ்ட்ரான் இன்ஃபோகாம் என்ற நிறுவனத்தின் ஆலையில் ஐபோன்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த ஆலையை அக்டோபர் 27 அன்று நடந்த போர்டு மீட்டிங்கில் நடந்த பேச்சு வார்த்தையின் போது சுமார் 125 மில்லியன் டாலர்களுக்கு டாடா குழுமம் வாங்கியுள்ளது. இதை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தநிலையில் டாடா குழுமம் அடுத்த இரண்டரை ஆண்டுகளில் இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்களை உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளில் தயாரிக்கத் தொடங்கும் என்று மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனால் இந்தியாவில் ஐபோன் தயாரிப்பில் ஈடுபடும் முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை டாடா பெற்றுள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட பிஎல்ஐ (Production Linked Incentive) திட்டம் ஏற்கனவே இந்தியாவை ஸ்மார்ட்போன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான நம்பகமான மற்றும் முக்கிய மையமாக மாற்றியுள்ளது. இப்போது இரண்டரை ஆண்டுகளில், டாடா நிறுவனங்கள் இப்போது இந்தியாவில் இருந்து உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு இந்தியாவில் இருந்து ஐபோன்களை தயாரிக்கத் தொடங்கும்.”
“விஸ்ட்ரான் செயல்பாடுகளை எடுத்துக்கொண்ட டாடா குழுவிற்கு வாழ்த்துக்கள். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி விஸ்ட்ரான், மற்றும் அதன் தலைமையில் இந்திய நிறுவனங்களுடன் இந்தியாவில் இருந்து உலகளாவிய விநியோகச் சங்கிலியை உருவாக்குவதில் ஆப்பிள் நிறுவனத்திற்கு மிகவும் நல்லது.”
“மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உலகளாவிய இந்திய எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முழு ஆதரவாக நிற்கிறது. அவை இந்தியாவை தங்கள் நம்பகமான உற்பத்தி மற்றும் திறமை பங்காளியாக மாற்ற விரும்பும் உலகளாவிய மின்னணு பிராண்டுகளுக்கு ஆதரவளிக்கும் மற்றும் இந்தியாவை உலகளாவிய மின்னணு சக்தியாக மாற்றும் பிரதமரின் இலக்கை அடைய வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.