ஒரே கிளிக்கில் பல லட்சங்கள் பறிபோகும் அபாயம்… அதிகரிக்கும் வாட்சப் சைபர் குற்றங்கள்.. தடுக்கும் வழிமுறைகள் இதோ…

இந்திய வாட்ஸ் அப் பயனர்கள், வாட்ஸ் அப் மோசடியில் இருந்து எப்படி பாதுகாப்பாக இருப்பது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
இந்தியாவில் ஆன்லைன், ஸ்மார்ட்போன் வழியாக மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த சில வாரங்களாக பலருக்கு சர்வதேச எண்களில் இருந்து அழைப்புகள் அல்லது வீட்டில் இருந்து வேலை செய்யும் பணிகள் குறித்த செய்திகள் வாட்ஸ் அப்பில் வலம் வருகின்றன. இதுவும் மோசடி கும்பலின் பண பறிக்கும் முயற்சிகளில் ஒன்றாகும். இவற்றில் இருந்து…
ஆன்லைன் மோசடிகள்:
சர்வதேச எண்களில் இருந்து வாட்ஸ் அப் செயலி மூலம் பலருக்கு மோசடி அழைப்புகள் வந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக, இந்திய வாட்ஸ் அப் பயனர்களுக்கு கடந்த சில வாரங்களாக வெளிநாட்டு எண்ணில் இருந்து, மோசடி அழைப்புகள் வரத் தொடங்கின. இதையடுத்து, வாட்ஸ் அப் நிறுவனம் குறிப்பிட்ட எண்களை பிளாக் செய்யுமாறும், ரிப்போர்ட் செய்யுமாறும், பயனர்களை அறிவுறுத்தியது.

வாட்ஸ் அப்பில் வரும் இந்தச் செய்திகள், போலியான பகுதி நேர வேலை என கூறி, அனுப்பும் லீங்கை க்ளிக் செய்ய வலியுறுத்தப்படும். அப்போது, அதனை க்ளிக் செய்தால், தங்களது பணம் பறிபோகிவிடும். சமீப காலமாக பலரும் பல லட்சங்களை இழந்து உள்ளனர். மக்களை ஏமாற்றி, உடனடி நமது செல்போன் பயன்பாடுகளைப் பயன்படுத்தும் மோசடியின் ஒரு பகுதி இதுவாகும். இந்த மோசடி என்ன, அதை எவ்வாறு தவிர்ப்பது மற்றும் பாதுகாப்பாக எப்படி இருப்பது என்பதை பார்க்கலாம்.
இந்தியர்களுக்கு குறிவைப்பு:
உலகெங்கிலும் உள்ள மோசடி கும்பல் வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் போன்ற செய்தியிடல் பயன்பாடுகள் மூலம் பெரும்பாலும் இந்தியர்களை குறிவைத்து வருகின்றனர். கடந்த சில வாரங்களில், நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சர்வதேச எண்களில் இருந்து அழைப்புகள் மற்றும் செய்திகளைப் பெறுவதாக புகார் அளித்துள்ளனர். இந்த அழைப்புகள் மற்றும் செய்திகள், ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பல சந்தர்ப்பங்களில், பல வாட்ஸ் அப் பயனர்கள் மோசடி செய்பவர்களிடமிருந்து அழைப்புகள் அல்லது செய்திகளைப் பெற்ற பிறகு, தனது வங்கிகணக்கில் உள்ள பணத்தை இழந்துள்ளனர். இந்த மோசடி சம்பவங்களானது, மத்திய அரசு ஆலோசனை வழங்கும் அளவுக்கு மிகப்பெரிய அளவில் நாளுக்கு நாள் வளர்ந்து நிற்கின்றன.
அதிகாரிகள் எச்சரிக்கை:

WhatsApp scam [Image Source :Getty]
சர்வதேச எண்களில் இருந்து வரும் அழைப்புகள் மற்றும் செய்திகள் குறித்து இந்திய வாட்ஸ்அப் பயனர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டு வருகின்றனர். இந்த மோசடி அழைப்புகளில் பெரும்பாலானவை +251 (எத்தியோப்பியா), +60 (மலேசியா), + 62 (இந்தோனேசியா), +254 (கென்யா), (+84) வியட்நாம் ஆகிய எண்களில் இருந்து தொடங்குகின்றன.
புகாரளிப்பது முக்கியம்:
சமீபகாலமாக நிலைமையின் தீவிரத்தைப் உணர்ந்து, வாட்ஸ்அப் நிறுவனம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதுதொடர்பாக அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது. பயனர்கள் மோசடி அழைப்புகளை உடனடியாகத் தவிர்த்து, அதுகுறித்து புகாரளிக்க வேண்டும் என்றும் வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது. சந்தேகத்திற்குரிய வாட்ஸ் அப் எண்களை முடக்கவும், புகாரளிக்கவும் வாட்ஸ் அப் வசதிகளை வழங்கி வருகிறது.

இந்தக் போலி எண்கள் குறித்து வாட்ஸ் அப்பில் உடனடியாக புகாரளிப்பது மிக முக்கியம், இதன் மூலம் மோசடி செய்பவர்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்கலாம். அவற்றை தடை செய்யலாம். வாட்ஸ் அப்பின் தனியுரிமைக் கட்டுப்பாடுகளை சரியாக உபயோகப்டுத்துவதன் மூலம், பயனர்கள் தங்கள் தனிப்பட்ட விவரங்களைப் மற்றவர்களிடம் இருந்து பாதுக்காப்பாக வைத்து இருக்கலாம்.
4.7 மில்லியன் கணக்குகளை தடை:

உங்கள் தனிப்பட்ட விவரங்களை உங்கள் தொடர்புகளுக்கு மட்டுமே தெரியும்படி வைத்திருப்பது, உங்கள் கணக்கை தேவையில்லாத நபர்களிடம் இருந்து பாதுகாக்க உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்களிடமிருந்து புகார்களைப் பெற்ற பின்னர் மார்ச் மாதத்தில் மட்டும் 4.7 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகளை தடை செய்துள்ளதாக வாட்ஸ் அப் சமீபத்தில் தெரிவித்துள்ளது. இருப்பினும், மோசடிகளை எதிர்த்துப் போராடுவதற்கு பயனுள்ள நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பயனர்களை வாட்ஸ் அப் வலியுறுத்தியுள்ளது.
இந்த மோசடிகள் என்ன, நீங்கள் எதை மனதில் கொள்ள வேண்டும்? என்பதை தற்போது பார்க்கலாம்:
மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் வாட்ஸ் அப்பைப் பயன்படுத்தி, பகுதி நேர வேலை என்ற வாக்குறுதியுடன் பயனர்களை ஈர்க்க முயற்சி செய்கிறார்கள். அவர்களுடன் பயனர்கள் செய்தி வாயிலாக பேச ஆரம்பித்து நம்பிக்கையைப் பெற்றவுடன், அவர்கள் ஒரு டெலிகிராம் குழுவில் சேரச் சொல்வார்கள். அந்த குழுவில், மோசடி செய்பவர்கள் யூடியூப் வீடியோக்களை லைக் செய்யவும், உணவகங்களுக்கு மதிப்பிடவும் அல்லது திரைப்படங்களைப் பார்த்து மதிப்பிடவும் என பயனர்களுக்கு அறிவுறுத்துவார்கள்.

மோசடி செய்பவர்கள் ஆரம்பத்தில் பயனர்களின் நம்பிக்கையைப் பெற ஒரு சிறிய தொகையை பயனர்கள் வங்கி கணக்கிற்கு செலுத்துவார்கள். இருப்பினும், அவர்கள் பயனரின் நம்பிக்கையைப் பெற்றவுடன், மோசடி செய்பவர்கள், பயனர்களுக்கு பணம் செலுத்துவதை நிறுத்தி விடுவார்கள். நம்பிக்கையைப் பெற்ற பிறகு, மோசடி செய்பவர்கள் அடுத்த கட்டத்திற்குச் செல்வார்கள். அதாவது, அதிக பணம் சம்பாதிப்பதற்காகப் பணத்தை டெபாசிட் செய்யும்படி பயனர்களைக் வற்புறுத்துவார்கள். அதன் மூலம் அதிக லாபம் என ஆசை காட்டுவார்கள்.
இந்தியாவில் உள்ள WhatsApp பயனர்களுக்கு மோசடி செய்பவர்கள் அனுப்பும் சில செய்திகள் இங்கே.
வாட்ஸ் அப் மோசடிகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, நீங்கள் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் மற்றும் அத்தகைய செய்திகளை அடையாளம் காண கற்றுக்கொள்ள வேண்டும். இதுபோன்று மோசடி அழைப்புகள், செய்திகள் வரும் போது அவர்களுக்கு பதிலளிக்க வேண்டாம், அவர்களை பிளாக் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப்பில் இதுபோன்ற மோசடி செய்திகள் அல்லது அழைப்புகள் வந்தால் மனதில் கொள்ள வேண்டிய சில குறிப்புகள்:

- அறியப்படாத சர்வதேச அல்லது உள்நாட்டு எண்களில் இருந்து வரும் அழைப்புகள் அல்லது செய்திகளுக்கு பதிலளிக்கவோ அல்லது பதிலளிக்க வேண்டாம்.
- உங்களுக்கு வேலை அல்லது பரிசு வழங்குவதாகக் கூறும், எவருக்கும் உங்கள் தனிப்பட்ட தகவல் அல்லது வங்கி தகவலை பகிர வேண்டாம்.
- அந்நியர்களால் அனுப்பப்படும் எந்த இணைப்புகளையும் (லிங்க்) கிளிக் செய்யவோ அல்லது எந்த இணைப்புகள் (லிங்க்) மூலம் பதிவிறக்கம் செய்யவோ வேண்டாம்.
- டெலிகிராம் சேனலில் சேரவோ அல்லது பணியை முடிக்கவோ உங்களிடம் கேட்கும் எவருக்கும் நீங்கள் பணம் செலுத்த வேண்டாம்.
- வாட்ஸ்அப் அல்லது உங்கள் மொபைல் எண்ணில் உங்களைத் தொடர்பு கொள்ளும் மோசடி நபர் குறித்து உடனடியாக புகாரளிக்க வேண்டும்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் ஆன்லைன் மோசடியில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும். இந்த மோசடிகள் குறித்து உடனடியாக புகாரளிக்கலாம். மொத்தத்தில், WhatsApp அல்லது பிற சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்தும் போது விழிப்புடன் இருப்பது மிக முக்கியம். குறிப்பாக, அறியப்படாத சர்வதேச எண்களிலிருந்து அழைப்புகள் மற்றும் செய்திகளைப் பெறும்போது பயனர்கள் விழிப்புடன் இருப்பதும் முக்கியமான ஒன்றாகும்.