நிர்வாகக் குழு ராஜினாமா செய்ய வேண்டும்.. இல்லையெனில்.? ஓபன் ஏஐ ஊழியர்கள் அச்சுறுத்தல்,.!
சாட் ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான ஊழியர்கள், அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு பதவி விலக வேண்டும் என்றும் அவ்வாறு பதவி விலகவில்லை என்றால் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யப்போவதாகவும் அச்சுறுத்தி உள்ளனர்.
கடந்த நவம்பர் 18ம் தேதி ஓபன் ஏஐ நிறுவனம் அதன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேனை பதவியில் இருந்து நீக்கியது. அதற்கு காரணமாக, நிர்வாக இயக்குனர்கள் குழுவிடம் ஆலோசனை நடத்தியதாகவும், அதில் ஆல்ட்மேன் தனது நிர்வாக குழுவுடன் பல இடங்களில் வெளிப்படைத்தன்மையுடன் இல்லை என்றும் தகவல் தொடர்பில் தொடர்ந்து நிலையாக இல்லை எனவும் கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து, நிர்வாகக்குழு அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டது எனவும் கூறி சாம் ஆல்ட்மேனை தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து நீக்கும் முடிவை எடுத்ததாகக் கூறப்பட்டது. சாம் ஆல்ட்மேன் நீக்கப்பட்டதால் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக, ஓபன்ஏஐயின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மீரா முராட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், தலைமை நிர்வாகி அதிகாரி பதவியில் இருந்து சாம் ஆல்ட்மேன் நீக்கப்பட்டதும், ஓபன் ஏஐ நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரெக் பிராக்மேனும் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இது மற்ற நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல் ஓபன் ஏஐ ஊழியர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
பிறகு ஓபன் ஏஐ முன்னாள் சிஇஓ சாம் ஆல்ட்மேன் மற்றும் இணை நிறுவனர் கிரெக் ப்ரோக்மேன் ஆகியோர் மைக்ரோசாப்ட் உடன் இணைந்து, புதிய மேம்பட்ட ஏஐ ஆராய்ச்சி குழுவை வழிநடத்துவார்கள் என மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா கூறினார்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணையும் சாம் ஆல்ட்மேன் மற்றும் கிரெக் ப்ரோக்மேன்.!
தற்போது சாம் ஆல்ட்மேன் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓபன் ஏஐ நிறுவனத்தில் இருக்கும் 700 ஊழியர்களில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை, நிர்வாக இயக்குனர்கள் குழுவிற்கு அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில், “ஆல்ட்மேன் வாரியத்துடன் நேர்மையாக இருக்கவில்லை என்ற கூற்றுகளுக்கு. நீங்கள் எந்த எழுத்துப்பூர்வ ஆதாரத்தையும் வழங்கவில்லை.”
“சாம் ஆல்ட்மேனை பணிநீக்கம் செய்து, கிரெக் ப்ரோக்மேனை குழுவில் இருந்து நீக்கிய செயல்முறை, ஓபன் ஏஐ-ஐக் கண்காணிக்கும் தகுதி உங்களிடம் இல்லை என்பதை உங்கள் நடத்தை தெளிவுபடுத்தியுள்ளது. நீங்கள் ராஜினாமா செய்து, நிறுவனத்தை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய ஒரு தகுதி வாய்ந்த குழுவை நிறுவ வேண்டும்.”
“எங்கள் பணி மற்றும் பணியாளர்களுக்கான தகுதி மற்றும் அக்கறை இல்லாதவர்களுக்காக வேலை செய்ய முடியாது. நீங்கள் விலகவில்லையென்றால், நாங்கள் அனைவரும் ஓபன் ஏஐ-ல் இருந்து ராஜினாமா செய்து, மைக்ரோசாப்ட்டில் சாம் ஆல்ட்மேன் பணியாற்ற உள்ள ஏஐ பிரிவில் பணியாற்ற உள்ளோம். இந்நிறுவனத்தில் ஓபன் ஏஐ ஊழியர்களுக்கும் பதவிகள் உள்ளன என்று மைக்ரோசாப்ட் எங்களுக்கு உறுதியளித்துள்ளது.”
“தற்போதைய குழு உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்து, பிரட் டெய்லர் மற்றும் வில் ஹர்ட் போன்ற இரண்டு புதிய முன்னணி இயக்குநர்களை நியமித்து, சாம் ஆல்ட்மேன் மற்றும் கிரெக் ப்ரோக்மேன் ஆகியோரை மீண்டும் பணியில் அமர்த்தும் வரை, இந்த நடவடிக்கையை நாங்கள் பின்பற்றுவோம்.’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில் கையெழுத்திட்டவர்களில் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்ட மீரா முராட்டியும் ஒருவர்