அடடே…மின்சார சாலையா..?? வாகனங்கள் ஓடும்போதே பேட்டரியை சார்ஜ் செய்யலாமா..??
மொபைல்போனிற்கு வந்துவிட்டது போன்று, வயர்லெஸ் முறையிலும் மின்சார கார் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன. எனினும், விரைவாக சார்ஜ் செய்வதற்கான உரிய தீர்வு இன்னமும் எட்டப்படவில்லை.
இந்த சூழலில், ஸ்வீடன் நாட்டு போக்குவரத்துத் துறை ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளது. ரயில் தண்டவாளங்களின் பக்கத்தில் மின்கம்பங்கள் அமைத்து ரயில் எஞ்சின்களுக்கு மின்சாரம் வழங்குவது போன்று, சாலையில் செல்லும் மின்சார வாகனங்களின் பேட்டரிக்கு மின்சாரம் வழங்கும் புதுமையான சாலையை அந்நாட்டு போக்குவரத்து துறை அமைத்துள்ளது.
2030ம் ஆண்டு மரபுசார் எரிபொருள் தேவையை முற்றிலும் கைவிடும் நோக்கத்தில் இந்த திட்டத்தை ஸ்வீடன் அரசு கையில் எடுத்துள்ளது. ஸ்வீடன் நாட்டு தலைநகர் ஸ்டாக்ஹோம் விமான நிலையத்தில் இருந்து அருகில் உள்ள போஸ்ட்நொடு என்ற சரக்கு பரிமாற்ற மையத்திற்கு இடையே மின்மயமாக்கப்பட்ட சாலை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த மின்சார சாலையின் நடுவில் மின்சாரத்தை வழங்கும் இரும்பு தண்டவாளங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.
இந்த சாலையின் மீது செல்லும் டிரக், கார் உள்ளிட்ட வாகனங்களில் இருக்கும் ‘கை’ போன்ற அமைப்பு இந்த இரும்பு தண்டவாளங்களை சில மிமீ இடைவெளியில் தொட்டுக் கொண்டு செல்லும்போது பேட்டரிக்கு மின்சாரம் சப்ளையாகும். வாகனம் ஓடிக் கொண்டிருக்கும்போதே பேட்டரி சார்ஜ் ஏற்றம் நடக்கும். இதன்மூலமாக, பேட்டரி சார்ஜ் செய்வதற்காக தனியாக நேரம் ஒதுக்கி கால விரயம் செய்ய வேண்டி இருக்காது. இப்போது 2 கிமீ தூரத்திற்கு மட்டுமே அமைக்கப்பட்டு சோதனை அடிப்படையில் மின்சார டிரக் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு ஆய்வுகள் நடக்கின்றன.
இது ஒரு பரீட்சார்த்த அடிப்படையிலான முயற்சிதான். இந்த சாலையின் சோதனை முயற்சிகள் வெற்றி பெறும் பட்சத்தில் விரிவாக்கம் செய்யப்படும். வாகனங்களை ஓவர்டேக் செய்யும்போதோ அல்லது தடம் மாற வேண்டி இருக்கும்போது, இந்த வாகனங்களில் இருக்கும் கை போன்றே அமைப்பு தானாக மடங்கிவிடும்.அதேபோன்று, வாகனம் நிறுத்தும்போதும் மின்சார சப்ளை நின்றுவிடும். இதனால், முழு பாதுகாப்பான மின்மயமாக்கப்பட்ட சாலை திட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சாலையில் செல்லும்போது வாகனம் பயன்படுத்தி இருக்கும் மின்சார அளவை கணக்கீடு செய்து, அதற்குண்டான கட்டணத்தையும் ஓட்டுனருக்கு தெரிவித்துவிடுமாம்.