யூடியூப்பிற்கு போட்டியாக மஸ்க்கின் பிரத்யேக டிவி ஆப்… உறுதிப்படுத்திய தலைமை நிர்வாக அதிகாரி!
X TV App: யூடியூப்பிற்கு சவால் விடும் வகையில் X TV App உருவாகி வருகிறது என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
எலான் மஸ்க்கின் எக்ஸ் வலைத்தளம் யூடியூப்க்குப் போட்டியாக டிவி ஆப் ஒன்றை உருவாக்கி வருகிறது. இந்த டிவி ஆப் தற்போது பல்வேறு கட்ட சோதனையில் இருந்து வருவதாகவும், முதற்கட்டமாக ஸ்மார்ட் டிவிகளுக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த டிவி ஆப்பானது நீண்ட நேரம் உள்ள வீடியோக்களை பார்க்கும் வகையில் உருவாகி வருவதாகவும் கூறப்பட்டது.
அதன்படி, இந்த எக்ஸ் டிவி ஆப் முதலில் Fire OS (Amazon) மற்றும் Tizen OS (Samsung) ஆகியவற்றில் இயங்கும் ஸ்மார்ட் டிவிகளுக்கு கிடைக்கும் என்றும் பின்னர் மற்ற தளங்களுக்கு விரிவுபடுத்தப்படும் எனவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த பிரத்தியேக எக்ஸ் டிவி செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் சமீபத்தில் எலான் மாஸ்க் தனது எக்ஸ் வலைதள பக்கத்திலும் அறிவித்திருந்தார்.
எனவே எக்ஸ் டிவி செயலியானது யூடியூப் போன்று வடிவமைப்பை கொண்டுள்ளது. இதனால் யூடியூப்பிற்கு போட்டியாக எக்ஸ் டிவி செயலி இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், எக்ஸ் வலைத்தளம் உருவாக்கி வரும் பிரத்யேக டிவி செயலியானது யூடியூப்பிற்கு சவால் விடும் வகையில் இருக்கும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யாக்காரினோ உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவரது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் சிறிய திரையில் இருந்து பெரிய திரை வரை உள்ள அனைத்தையும் எக்ஸ் மாற்றிக் கொண்டிருக்கிறது. விரைவில் நாங்கள் X TV செயலி மூலம் உங்கள் ஸ்மார்ட் டிவிகளில் உள்ளடக்கத்தை நிகழ்நேரத்தில் கொண்டு வருவோம்.
இந்த X TV செயலியானது பெரிய ஸ்க்ரீனில் உயர்தர மற்றும் அதிவேக பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும். இதனால் X TV செயலியை இன்னும் மேம்படுத்தலுடன் நாங்கள் உருவாக்கி வருகிறோம். ஆனால் நீங்கள் எதிர்பார்க்கக் கூடியவற்றின் ஸ்னீக் பீக் இங்கு உள்ளது என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் அவரது பதிவில் டிரெண்டிங் வீடியோ அல்காரிதம், AI டெக்னலாஜி, மேம்படுத்தப்பட்ட வீடியோ தேடல், விரைவாக கண்டறியும் வசதி, எளிமையான கேஸ்டிங் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருப்பதை குறிப்பிட்டு, இந்த செயலி குறித்த உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று நாங்கள் எங்கள் எக்ஸ் வலைதள பயனர்களுக்காக இதனை உருவாக்கி வருகிறோம் எனவும் கூறியுள்ளார்.
From the small screen to the big screen X is changing everything. Soon we’ll bring real-time, engaging content to your smart TVs with the X TV App. This will be your go-to companion for a high-quality, immersive entertainment experience on a larger screen. We’re still building it… pic.twitter.com/QhG6cVDpZ8
— Linda Yaccarino (@lindayaX) April 23, 2024