கடந்த 3 ஆண்டுகளில் ட்விட்டரின் உள்ளடக்கம் அதிகம் தடுக்கப்பட்டது..! MeitY தரவு
கடந்த மூன்று ஆண்டுகளில், அரசாங்கத்தால் ட்விட்டரில் உள்ள உள்ளடக்கம் அதிகம் தடுக்கப்பட்டுள்ளது.
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வழங்கிய தகவலின் படி, கடந்த மூன்று ஆண்டுகளில் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட உள்ளடக்கங்களில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற அனைத்து சமூக ஊடக தளங்களை விட ட்விட்டரின் உள்ளடக்கம் அதிகம் தடுக்கப்பட்டுள்ளது. 2020 முதல் 2022 வரை, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) வழங்கிய தரவு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற அனைத்து சமூக ஊடக தளங்களிலும், ட்விட்டரில் உள்ள உள்ளடக்கம் அதிகம் தடுக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.
ராஜ்யசபாவில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மாநில அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஒரு கேள்விக்கு பதிலளித்த போது, ஐடி சட்டம் 2000-இன் பிரிவின் கீழ், 2020 ஆம் ஆண்டில் ட்விட்டரில் 3,417 இடுகைகள் மற்றும் கணக்குகளின் இணைப்புகள் தடுக்கப்பட்டது என்றும் இதற்கு நேர்மாறாக, 2022-ல் பேஸ்புக்கில் (Facebook) 1,743 இணைப்புகள், யூடியூபில் (YouTube) 809 இணைப்புகள் மற்றும் இன்ஸ்டாகிராமில் (Instagram) 355 இடுகைகள் மட்டுமே தடுக்கப்பட்டுள்ளன எனவும் கூறினார்.
இதையடுத்து கடந்த ஆண்டு ஐடி அமைச்சகம் பிறப்பித்த இந்த தடை உத்தரவுகளில் சிலவற்றை எதிர்த்து இந்திய அரசுக்கு எதிராக ட்விட்டர் நீதிமன்றத்திற்கு சென்றது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவின் கீழ், இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டின் நலன் போன்ற காரணங்களுக்காக, வெளி மாநிலங்களுடனான அரசின் நட்புறவின் நாட்டின் பாதுகாப்பு மற்றும் பலவற்றின் கீழ், ட்விட்டர் போன்ற தளங்களுக்கு தடை உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பிக்க முடியும் என்று மேலும் கூறினார்.