Meta Quest: ஆப்பிள் விஷன் ப்ரோக்கு போட்டியா.? அடுத்த படைப்பிற்கு எல்ஜியுடன் கைகோர்த்த மெட்டா.!
விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் ஆனது வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில், தொழிநுட்ப நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை அதன்பக்கம் திருப்பியுள்ளன. அந்த வகையில், சமீபத்தில் ஆப்பிள் விஷன் ப்ரோ (Apple Vision Pro) என்று அழைக்கப்படும் விர்ச்சுவல் ரியாலிட்டி அம்சத்துடன் கூடிய ஒரு புதிய ஹெட்செட்டை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது.
இந்த ஹெட்செட் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவில் 3,499 டாலர் (ரூ.2.86 லட்சம்) என்ற விலையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விஷன் ப்ரோவில் உள்ள கேமரா மூலம் புகைப்படம் எடுத்து அதனை பார்க்கும் போது, அது புகைப்படம் போல அல்லாமல், நீங்கள் உண்மையாகவே அங்கே இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். இந்த விஷன் ப்ரோவை, ஒரு ஸ்மார்ட்போன் போல பயன்படுத்தலாம்.
இதற்கிடையில், தொழிநுட்ப நிறுவனமான மெட்டாவும் தனது ஜென் மெட்டா குவெஸ்ட் 3 விஆர் ஹெட்செட்டை வெளியிட தயாராகி வருகிறது. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் விஷன் ப்ரோவிற்கு போட்டியாக இருக்கும் வகையில், ஆக்மென்டட் ரியாலிட்டி (ஏஆர்) அம்சத்துடன் ஹெட்செட்டுகளைத் தயாரிக்க, தொழில்நுட்ப நிறுவனமான எல்ஜி உடன் மெட்டா கைகோர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, அடுத்து வரவிருக்கும் குவெஸ்ட் ப்ரோ ஹெட்செட்களை தயாரிக்க, எல்ஜியின் மைக்ரோஎல்இடி மற்றும் மைக்ரோஓஎல்இடி மைக்ரோடிஸ்ப்ளே தொழில்நுட்பங்களை மெட்டா பயன்படுத்தலாம். மேலும், எல்ஜி நிறுவனம் அதன் ஓஎல்இடி டிஸ்ப்ளேக்கள், பேட்டரிகள் மற்றும் பிற பாகங்களையும் வழங்கும். இந்த இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும், ஹெட்செட் ஆனது 2025 இல் வெளியிடப்படும் என்றும், அதன் விலை சுமார் $2,000 (ரூ 1.65 லட்சம்) ஆக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இது ஆப்பிளின் விஷன் ப்ரோவை விட குறைவான விலை என்றாலும். மெட்டாவின் தற்போதைய ஹெட்செட்டின் விலையில் இருந்து அதிகமாகவே உள்ளது. அதன்படி, மெட்டாவின் குவெஸ்ட் ஹெட்செட்களின் விலை $999 (ரூ. 83,000) ஆகும். மேலும், மெட்டா நிறுவனம் தனது விஆர் ஹெட்செட்டுகளை தயாரிக்க மற்ற நிறுவனங்களுடன் கைகோர்ப்பது இது முதல் முறையல்ல.
முன்னதாக, அக்குலஸ் கோ ஆனது சியோமி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டது. அக்குலஸ் ரிப்ட் எஸ் ஆனது லெனோவோ நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், சாம்சங் நிறுவனமும் அதன் சொந்த விர்ச்சுவல் ரியாலிட்டி அம்சம் கொண்ட ஹெட்செட்டை, ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்டுக்கு போட்டியாக தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.