வெளியானது வியாழன் கிரகத்தின் புதிய புகைப்படம்!
வியாழன் கிரகத்தின் புதிய படமொன்றை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, தற்போது வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் ‘ஜூனோ’ என்ற விண்கலத்தை, வியாழன் கிரகத்தை ஆய்வு செய்வதற்கு அனுப்பியது. அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த காமிரா, வியாழன் கிரகத்தில் ஏற்படும் பருவ நிலை மாற்றம் மற்றும் தட்பவெப்ப நிலைகளை படமாக எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.
அந்த வரிசையில் எடுக்கப்பட்ட புதிய புகைப்படத்தை, நாசா தற்போது வெளியிட்டுள்ளது. கருநீல வண்ணத்தின் அழகான அந்தப் புகைப்படம், பிப்ரவரி 7-ம் தேதி படம்பிடிக்கப்பட்டுள்ளது. வியாழன் கிரகத்திலிருந்து ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 533 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து புகைப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக நாசா தெரித்துள்ளது.
இதேபோன்று கடந்த சில நாட்களுக்குமுன் வியாழன் கிரகத்தில் கடுமையான புயல் வீசியதை ஜுனோ விண்கலம் புகைப்படம் எடுத்து அனுப்பியது குறிப்பிடத்தக்கது.