மெட்டாவையும் விட்டு வைக்காத க்ரவுட் ஸ்ட்ரைக் சிக்கல்.! விவரம் இதோ…
க்ரவுட்ஸ்ட்ரைக்: மெட்டா நிறுவனத்தையும் மறைமுகமாக க்ரவுட்ஸ்ட்ரைக் புதுபிப்பு (அப்டேட்) பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாம். பயனர்கள் கேள்விக்கு பதில் அளிக்கும் சில வசதிகள் தடைப்பட்டன என கூறப்படுகிறது.
மைக்ரோசாப்ட் இயங்குதளத்தில் ஏற்பட்ட க்ரவுட்ஸ்ட்ரைக் பிரச்சனை காரணமாக உலகளவில் தொழில்நுட்பத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் மிக பெரிய பாதிப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஒருநாள் முழுக்க இந்த பாதிப்பு நிலவியது. தற்போது பெரும்பாலான துறைகள் தங்கள் இயல்புநிலைக்கு திரும்பியது.
க்ரவுட்ஸ்ட்ரைக் எனும் இணைய பாதுகாப்பு (பெரிய நிறுவனங்களுக்கான் ஆன்டி வைரஸ் செயலி போன்றது) நிறுவனம் அப்டேட் செய்தது. இந்த அப்டேட் உலகளவில் உள்ள மைக்ரோசாப்ட் இயங்குதளம் செயல்படாத வகையில் அமைந்துவிட்டதே உலகளாவிய தொழில்நுட்ப பிரச்சனைக்கு காரணமாக அமைந்தது.
இந்த பிரச்சனை மைக்ரோசாப்ட் இயங்குதளத்தை மட்டும் நேரடியாக பாதிக்கவில்லை. மைக்ரோசாப்ட் மூலம் மறைமுகமாக செயல்படும் மற்ற நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனமும் மறைமுகமாக க்ரவுட்ஸ்ட்ரைக் பாதிப்பால் பாதிக்கப்ட்டுள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மெட்டா நிறுவனத்தில் செய்தி தொடர்பாளர் கூறுகையில், மெட்டா நிறுவனம் நேரடியாக இந்த பாதிப்பால் பாதிக்கப்படவில்லை. மெட்டாவில் செய்யப்படும் மூன்றாம் தர நிறுவனங்கள் உற்பத்தி அமைப்பு செயலலிப்பை எதிர்கொண்டன.
அதாவது, உலகளாவிய CrowdStrike செயலிழப்பினால், எங்களின் கீழ் செயல்படும் சில நிறுவனங்கள் மைக்ரோசாப்டை பயன்பாடுத்த முடியாமல் திணறின. அதனால் பல வசதிகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டன. இது எங்கள் சில பயனர் ஆதரவு நடவடிக்கைகளில் சிறிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும், எங்களின் உள்ளடக்க மதிப்பாய்வில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என கூறினார்.
அதாவது, மெட்டாவில் தவறாக சர்ச்சைக்குரிய வகையில் பதிவிடும் கருத்துக்களை கண்காணிப்பது, பயனர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வசதிகள் ஆகிவற்றிக்கு ஏஐ பயன்படுத்தப்பட்டாலும், மூன்றாம் தர ஒப்பந்த முறை நிறுவனங்களும் இதில் தங்கள் ஊழியர்களை நேரடியாக பயன்படுத்துகின்றனர். அவர்கள் தான் இந்த க்ரவுட்ஸ்ட்ரைக் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மெட்டா நிறுவன செய்தி தொடர்பாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
இதனால், பயனர்கள் கேள்விக்கு, கருத்துக்கு, கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கமுடியாத சூழல் ஏற்பட்டது என்றும், தற்போது இந்த செயலிழப்பினால் ஏற்படும் பாதிப்புகளை கண்காணித்து வருவதாகவும், எதிர்பார்த்த அளவில் மெட்டா செயல்பாடுகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.