iPhone15: இந்தியாலேயே ரெடி பண்ணி அறிமுகப்படுத்த போறாங்க..! எப்போது தெரியுமா..?
ஐபோன் பிரியர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 12ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த ஐபோன் 15 சீரிஸ் கலிபோர்னியாவின் குபெர்டினோவில் உள்ள ஆப்பிள் பூங்காவில் நடக்கும் ‘வொண்டர்லஸ்ட்’ என்ற நிகழ்வில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் ஐபோன் 15 மாடல்கள் உற்பத்தியானது இந்தியாவில் ஏற்கனவேத் தொடங்கியது. அதன்படி, தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஐபோன் 15 தயாரிப்பு நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஐபோன்கள் உலக அளவில் ஒரே நேரத்தில் விற்பனைக்கு வரலாம். அல்லது, முதலில் இந்திய பயனர்களுக்கு மட்டும் கிடைக்கலாம்.
பிற நாடுகளுக்கு ஏற்றுமதி டிசம்பர் மாதத்திற்குப் பிறகு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களின் அளவை விரைவாக அதிகரிக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இந்தியா மற்றும் சீனாவில் இருந்து ஏற்றுமதியை சமநிலைக்கு கொண்டு வருவதை நிறுவனம் நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த ஐபோன் 15 சீரிஸில் ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய நான்கு மாடல்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்கள் ஐபோன் 14 ப்ரோ மாடலில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது, ஐபோன் 14 ப்ரோ ஆனது ஏ16 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுகிறது. அதே போல ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ் ஸ்மார்ட்போனிலும் இந்த சிப் இடம்பெறலாம். அதே நேரத்தில் ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் A17 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 15 ஆனது ஆப்பிள் ஐபோன் 14 ஐப் போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடலில் 6.1 இன்ச் டிஸ்ப்ளேவும், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் 6.7 இன்ச் டிஸ்ப்ளேவையும் கொண்டிருக்கலாம். இந்த மாடல்களில் நாட்ச்க்கு பதிலாக ஐபோனுக்கே உரித்தான டைனமிக் ஐலேண்ட் கட்அவுட் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் 15 இல் 48 எம்பி மெயின் கேமரா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் 48 எம்பி மெயின் கேமரா மற்றும் 12 எம்பி அல்ட்ராவைட் கேமராவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்த ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு போன்களில் இருக்கும் யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலையானது ரூ.66,000 முதல் ரூ,90,000 வரை இருக்கலாம்.