iPhone 15 sale: இந்தியாவில் விற்பனைக்கு களமிறங்கிய ஐபோன் 15.! என்னென்ன சலுகைகள் இருக்கு தெரியுமா.?

iPhone 15 sale

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஐபோன் 15 சீரிஸ் (IPhone 15 Series) ஸ்மார்ட்போன்களின் விற்பனையை இன்று தொடங்கியுள்ளது. கடந்த செப்-13ம் தேதி இந்தியாவில் அறிமுகமான இந்த சீரிஸில் ஐபோன் 15, பிளஸ், ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் என 4 மாடல்கள் அறிமுகமானது. இந்நிலையில், தற்போது இந்தியாவில் இன்று ஐபோன் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனைத் தொடங்கியுள்ளது.

அதன்படி, மும்பை பந்த்ரா குர்லா வளாகத்தில், ஜியோ வேர்ல்ட் டிரைவ் மாலில் அமைந்துள்ள ஆப்பிள் பிகேசி ஸ்டோர் மற்றும் டெல்லியின் சாகேட்டில் உள்ள ஆப்பிள் சாகெட் ஸ்டோரில் விற்பனைத் தொடங்கியுள்ளது. இந்த விற்பனையைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பல வாடிக்கையாளர்கள் அதிகாலையில் இருந்து ஸ்டோர்களுக்கு வெளியே வரிசையில் காத்திருந்தனர்.

இதற்கிடையில், ஆப்பிள் செப்டம்பர் 15ம் தேதி முதல் ஐபோன்களின் முன்கூட்டிய ஆர்டரைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வாடிக்கையாளர்கள் வரிசையில் காத்திருந்து வாங்கும் இந்த ஸ்மாட்போனில் என்னென்ன அம்சங்கள் உள்ளது.?, இதற்கு என்னென்ன சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளது.? என்பதைக் காணலாம்.

அம்சங்கள்:

ஐபோன் 15 மற்றும் 15 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் அளவுள்ள சூப்பர் ரெட்டினா எச்டிஆர் டிஸ்ப்ளே மற்றும் ஐபோன் 15 பிளஸ் மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் அளவுள்ள சூப்பர் ரெட்டினா எச்டிஆர் டிஸ்ப்ளே உள்ளது. இந்த 4 மாடல்களில் ஒற்றுமை என்னவென்றால் ஐபோனுக்கே உரித்தான டைனமிக் ஐலேண்ட் கட்அவுட் உள்ளது. மேலும், 2,000 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது. நீர் மற்றும் தூசியில் இருந்து பாதுகாக்க ஐபி68 ரேட் உள்ளது.

ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடலில் ஏ16 பயோனிக் சிப் ஆனது பயன்படுத்தப்பட்டுள்ளது. அதோடு ஐபோன் 15 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடலில் உயர்தர ஏ17 ப்ரோ சிப் ஆனது பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களில் ஆக்ஷன் பட்டன் மற்றும் யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் என பல புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

விலை மற்றும் தள்ளுபடிகள்:

ஐபோன் 15 மாடலில் 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.79,900 ஆகவும்,  256 ஜிபி வேரியண்ட் விலை ரூ.89,900 ஆகவும், 512 ஜிபி வேரியண்ட் விலை ரூ. 1,09,900 ஆகவும் உள்ளது. ஐபோன் 15 பிளஸ் மாடலில் 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.89,900 ஆகவும், 256 ஜிபி வேரியண்ட் விலை ரூ.99,900 ஆகவும், 512 ஜிபி வேரியண்ட் விலை ரூ. 1,99,900 ஆகவும் உள்ளது.

ஐபோன் 15 ப்ரோ மாடலில் 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.1,34,900 ஆகவும், 256 ஜிபி வேரியண்ட் விலை ரூ.1,44,900 ஆகவும், 512 ஜிபி வேரியண்ட் விலை ரூ. 1,64,900 ஆகவும், 1 டிபி வேரியண்ட் விலை ரூ. 1,84,900 ஆகவும் உள்ளது.  ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் 256 ஜிபி வேரியண்ட் விலை ரூ.1,59,900 ஆகவும், 512 ஜிபி வேரியண்ட் விலை ரூ. 1,79,900 ஆகவும், 1 டிபி வேரியண்ட் விலை ரூ.1,99,900 ஆகவும் உள்ளது.

சலுகைகள்:

புதிய ஐபோன் 15 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸை வாங்கும் வாடிக்கையார்கள் எச்டிஎஃபிசி (HDFC) வங்கி கார்டுகளைப் பயன்படுத்தினால், அவர்களுக்கு 6,000 ரூபாய் உடனடி தள்ளுபடி வழங்கப்படும் என்று ஆப்பிள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐபோன் 15 மற்றும் 15 பிளஸ்களுக்கு ரூ.5,000 கேஷ்பேக்கும் உள்ளது. இந்த சலுகைகள் பழைய ஐபோன் மாடல்களுக்கும் உண்டு.

அதன்படி, ஐபோன் 14 மற்றும் 14 பிளஸிற்கு ரூ. 4,000 தள்ளுபடியும், ஐபோன் 13 ஸ்மார்ட்போனுக்கு ரூ. 3,000 தள்ளுபடியும் மற்றும் ஐபோன் எஸ்இ-க்கு ரூ. 2,000 தள்ளுபடியும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களை இஎம்ஐ-ல் (EMI) வாங்கும் வசதியும் உள்ளது. அதோடு உங்கள் பழைய மற்றும் கோளாறுகள் இல்லாத தகுதியான ஐபோனை எக்ஸ்சேஞ் செய்தால் ரூ.55,700 வரை உடனடி  கிரெடிட்டைப் பெற்று, புதிய ஐபோன் 15 ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்