மும்பை- ஆமதாபாத் இடையே இந்தியாவின் முதல் புல்லட் ரயில் விரைவில்..!!
இந்தியாவின் முதல் புல்லட் ரயிலில் பயணிப்பதற்கான கட்டண விபரங்கள் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மும்பை- ஆமதாபாத் இடையே நாட்டின் முதலாவது புல்லட் ரயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் ஜரூராக துவங்கி இருக்கின்றன.
வரும் 2019ம் ஆண்டு ஜனவரி முதல் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ரூ.1.08 லட்சம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட இருக்கும் இந்த திட்டம் வரும் 2022ம் ஆண்டு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 15ந் தேதி சுதந்திர தினத்தன்று புல்லட் ரயில் சேவையை நாட்டிற்கு அர்ப்பணிக்கவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
புல்லட் ரயில் கட்டணங்கள் விமானங்களுக்கு இணையாக இருக்கும் என்ற தகவல் உலவி வந்தன. இதுகுறித்து புதிய தகவல்கள் இப்போது வெளியாகி இருக்கின்றன. அதன்படி, புல்லட் ரயிலில் பயணிப்பதற்கு குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் அதிகபட்சமாக 3,000 வரை நிர்ணயிக்கப்பட இருப்பதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.
ஏசி முதல் வகுப்பு ரயில் கட்டணத்தைவிட ஒன்றரை மடங்கு கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.
உதாரணத்திற்கு, மும்பை பந்த்ரா- குர்லா காம்ப்ளஸ் ரயில் நிலையத்திலிருந்து தானே வரையில் பயணிக்க 250 ரூபாய் கட்டணமாக இருக்கும். சாதாரண ரயில்களில் 45 நிமிடங்கள் பிடிக்கும் நிலையில், புல்லட் ரயிலில் 15 நிமிடங்களில் சென்றுவிடலாம்.
முதல்கட்டமாக 10 பெட்டிகளை கொண்ட 24 ரயில் ஜதை புல்லட் ரயில்களை சேவைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். காலை மற்றும் மாலை வேளைகளில் 20 நிமிடங்களுக்கு ஒரு புல்லட் ரயில்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இவை துல்லியமான கால நேரத்தில் இயக்கப்படும். விமானங்களில் செல்லும்போது செக் இன் மற்றும் விமான நிலையத்தை அடைவதற்கான பயண நேரமும், புல்லட் ரயிலின் பயண நேரமும் ஒன்றாகவே இருக்கும். எனவே, விமானங்களில் பயணிப்போர் கூட இந்த ரயில்களில் பயணிக்க ஆர்வம் காட்டுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 20 நிமிட கால இடைவெளியில் இயக்கப்படுவதால், அரக்க பரக்க விமானத்தை பிடிக்க ஓட வேண்டியது இருக்காது. ஒரு ரயிலை விட்டால் கூட அடுத்த ரயிலில் ஏறி செல்லும் வாய்ப்பு இருக்கிறது.
மும்பை- ஆமதாபாத் இடையிலான புல்லட் ரயில் வழித்தடம் 508 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட இருக்கிறது. இதில், 460 கிமீ தூரத்திற்கான கட்டுமானப் பணிகளை இந்திய ஒப்பந்ததாரர்களும், 21 கிமீ நீளமுடைய கடலுக்கு அடியிலான சுங்கப்பாதை கட்டுமானப் பணிகளை ஜப்பானிய பொறியாளர்கள் நேரடியாகவும் செய்ய இருக்கின்றனர்.
மும்பை- ஆமதாபாத் இடையிலான புல்லட் ரயில் மணிக்கு 320 கிமீ வேகம் வரை இயக்கப்படும். மிகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் துல்லியமான நேரத்தில் செல்லும்.