பிளாஸ்டிக்கை சிதைவடையச் செய்யும் ஐடோனெல்லா சக்கய்யென்சிஸ்(Ideonella sakaiensis)..!!
உலக அளவில் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு அமெரிக்க மற்றும் பிரிட்டன் விஞ்ஞானிகள் குழுவினர் ஒரு தீர்வை கண்டுபிடித்துள்ளனர். பிளாஸ்டிக் பொருட்களை செரிக்கும் என்சைம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் 80 லட்சம் டன் அளவிற்கு கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பைகளால் நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் மனிதர்கள் கடும் அச்சுறுத்தலை சந்தித்து வருவதாக ஆய்வுகளின் வாயிலாக தெரிய வந்துள்ளது. மறுசுழற்சி செய்வதன் மூலம் பிளாஸ்டிக் மாசுபாடு பாதிப்பிலிருந்து மீள்வதற்கு உலகம் முழுவதும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், பெருகி வரும் மனித இனத்தின் தேவைகள் காரணமாக, பிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவை குறைப்பதற்கான முழுமையான தீர்வாக அவை அமையவில்லை.
இந்த முயற்சியின் ஒரு நீட்சியாக பிளாஸ்டிக்கை சிதைவடையச் செய்யும் திறனுடைய நுண்ணுயிரிகளைப் ஜப்பானைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். ஐடோனெல்லா சக்கய்யென்சிஸ் என்ற அந்த நுண்ணுயிரி, பிளாஸ்டிக் பாட்டில் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பாலித்தீன் டெரிப்தாலேட்டை உண்டு வாழ்வதை அவர்கள் ஆய்வின் மூலம் உறுதி செய்தனர். இந்நிலையில், போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் தேசிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையைச் சார்ந்த ஆராய்ச்சிக் குழுவினர், இந்த ஆராய்ச்சியை மேம்படுத்த முனைந்தனர். பிளாஸ்டிக்கை செரிப்பதற்காக அந்த நுண்ணுயிரியில் காணப்படும் PETஏஸ் எனப்படும் நொதியின் வேதியல் கட்டமைப்பு மற்றும் அதன் செயல்படும் விதத்தை ஆய்வு செய்தனர்.
ஆனால், இந்த முயற்சியின் நடுவே ஒரு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக, பிளாஸ்டிக்கை சிதைக்கும் திறனுடைய மேம்பட்ட ஒரு நொதியை விஞ்ஞானிகள் தற்செயலாக உருவாக்கியிருந்தனர். இந்த ஆராய்ச்சியில் சூரியனை விட ஆயிரம் கோடி மடங்கு பிரகாசமான மற்றும் சக்தி வாய்ந்த எக்ஸ்-ரே கதிர்களை பயன்படுத்தி அந்த நொதியின் முப்பரிமாண வேதி கட்டமைப்பு கண்டறியப்பட்டது.
இதன் தோற்றம், பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்களில் காணப்படும் கியூட்டினேஸ் என்ற நொதியை ஒத்திருப்பதாக தெரியவந்தது. ஆனால் திடீர் மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்ட PETஏஸ் நொதியின் ஒரு முனைப்பகுதி, கியூட்டினேசுடன் மாறுபட்டு இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில், அந்த மாற்றமே பிளாஸ்டிக் செரிமான திறனுக்கு ஒரு முக்கிய காரணம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இந்த குறிப்பிட்ட நொதியின் பிளாஸ்டிக் செரிக்கும் திறனை மேலும் மேம்படுத்தும் முயற்சிகளில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு இந்த நுண்ணுயிரி தொழில்நுட்பம் ஒரு நிரந்தர தீர்வாக அமையும் என்ற நம்பிக்கையை ஆராய்ச்சியாளர்கள் உருவாகியுள்ளனர்.