போக்குவரத்தை எளிமையாக்க வந்துவிட்டது ஹைப்பர்லூப்(Hyperlue test track) திட்டம்..!
பிரான்ஸ் நாட்டில் ஹைப்பர்லூப்(Hyperlue test track) போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்குவதற்கான சோதனை களத்தின் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டு இருக்கின்றன.
இது ஹைப்பர்லூப் போக்குவரத்து சோதனையில் முக்கிய மைல்கல்லாக அமையும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுவரை ‘ஸ்கேல் மாடல்’ எனப்படும் சிறிய மாதிரி தடங்கள் உருவாக்கப்பட்டு சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டின் டவ்லவ்ஸ் என்ற இடத்தில் முழுமையான ஹைப்பர்லூப் போக்குவரத்து தடத்திற்கான சோதனை களத்தின் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
இந்த தடம் 320 மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட இருக்கிறது. 4 மீட்டர் விட்டமுடைய ராட்சத குழாய்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இந்த ஆண்டு இறுதியில் இந்த தடத்தில் சோதனை ஓட்டங்கள் துவங்கும். அடுத்த ஆண்டு மேலும் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த சோதனை ஓட்ட தடத்தை விரிவுப்படுத்தவும் ஹைப்பர்லூப் டெக்னாலஜீஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த தடம் தரையிலிருந்து 5.8 மீட்டர் உயரத்தில் தூண்கள் மீது ராட்சத குழாய்களை பொருத்தி அமைக்கப்பட இருக்கிறது. பிரான்ஸில் அமைக்கப்படும் ஹைப்பர்லூப் போக்குவரத்துக்கான சோதனை ஓட்ட தடத்திற்கான பயணிகள் செல்லும் கேப்சூல்கள் ஸ்பெயின் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட இருக்கின்றன. இந்த கேப்சூல்களை சோதனை ஓட்ட களத்தில் இருக்கும் ராட்சத குழாய்களில் செலுத்தி சோதனை ஓட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
கடந்த 2013ம் ஆண்டு ஹைப்பர்லூப் போக்குவரத்து குறித்த யோசனையை ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் தயாரிப்பு நிறுவனம் மற்றும் டெஸ்லா மின்சார கார் தயாரிப்பு நிறுவனத்தின் அதிபரான எலான் மஸ்க் முன் வைத்தார். ராட்சத வெற்றிட குழாய்களில் பயணிகளுடன் கூடிய கேப்சூல் எனப்படும் சாதனத்தை மணிக்கு 1,200 கிமீ வேகத்தில் செலுத்துவதுதான் ஹைப்பர்லூப் போக்குவரத்து திட்டம்.
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில் 3.3 மீட்டர் விட்டமுடைய ராட்சத குழாய்களை இணைத்து 1.6 கிமீ நீளத்திற்கு சோதனை ஓட்ட களத்தை நிறுவியிருக்கிறது. இந்த சோதனை ஓட்டக் களத்தில் ஆரம்ப கட்ட பரிசோதனை முயற்சிகள் நடந்து வருகின்றன. வெர்ஜின் குழுமத்தின் அதிபர் சர் ரிச்சர்டு பிரான்ஸன் ஹைப்பர்லூப் ஒன் என்ற பெயரில் புதிய நிறுவனத்தை துவங்கினார்.
இந்த ஹைப்பர்லூப் ஒன் நிறுவனம் ஹைப்பர்லூப் போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்குவதற்கான சோதனைகளில் தீவிரமாக இறங்கி இருக்கிறது. அடுத்து, பிரான்ஸ் நாட்டின் ஹைப்பர்லூப் டிரான்ஸ்போர்ட் டெக்னாலஜீஸ் நிறுவனம்[HTT] முழுமையான ஹைப்பர்லூப் போக்குவரத்துக்கான கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் இறங்கி இருப்பது அடுத்த கட்டத்திற்கு ஹைப்பர்லூப் திட்டத்தை எடுத்துச் செல்லும் முயற்சியாக பாார்க்கப்படுகிறது.