Google Pixel: இந்தியாவில் பிக்சல் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்யும் கூகுள்.! பிக்சல் 8-லிருந்து தொடக்கம்.!

Google for India

தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், அதன் தயாரிப்பான கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி, தனது தயாரிப்பில் முதலில் கூகுள் பிக்சல் 8 ஸ்மார்ட்போனை உற்பத்தி செய்யும் என்றும் 2024ம் ஆண்டில் பயனர்களுக்கு விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று கூறியுள்ளது.

கூகுளின் முதல் பிக்சல் ஸ்மார்ட்போன் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதிலிருந்து பிரீமியம் சாப்ட்வேர், ஹார்ட்வர் மற்றும் அதிநவீன ஏஐ தயாரிப்புகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி, கடந்த அக்டோபர் 4ம் தேதி கூகுள் பிக்சல் 8 சீரிஸை இந்தியா உட்பட பல நாடுகளில் அறிமுகம் செய்தது.

கூகுள் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் பல சிறப்பான அம்சங்களுடன் அறிமுகமானது. பிக்சல் 8 சீரிஸ் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியத்தால் ஆனது. இது கூகுள் டென்சர் ஜி3 பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இதனுடன் டைட்டன் எம்2 என்கிற பாதுகாப்பு சிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இன்று நடைபெற்ற 9வது கூகுள் ஃபார் இந்தியா 2023 (Google for India 2023) என்ற நிகழ்வில்,  இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் முன்னிலையில், கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களை “மேக் இன் இந்தியா” முயற்சியில் இணைந்து இந்தியாவில் தயாரிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வில் பேசிய கூகுளின் சாதனங்கள் மற்றும் சேவைகளின் மூத்த துணைத் தலைவர் ரிக் ஆஸ்டர்லோ, இன்று இந்தியாவில் அதிகமான மக்களுக்கு பிக்சல் ஸ்மார்ட்போன்களை கிடைக்கச் செய்வதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக இதைப் பார்க்கிறோம். மேலும் இந்தியாவில் பிக்சல் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் திட்டத்தை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். பிக்சல் 8 ஸ்மார்ட்போனை தொடக்கமாக வைத்து இதனைத் தொடங்க உள்ளோம்.” என்றார்.

மேலும், இந்தியாவில் பிக்சல் ஸ்மார்ட்போன்களை தயாரிக்க சர்வதேச மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்களுடன் கூகுள் கூட்டு சேர்ந்துள்ளது. ஆனால் கூட்டாளர்களின் பெயர்களை கூகுள் தெரிவிக்கவில்லை. இருந்தும் முன்னதாக லாவா இன்டர்நேஷனல் லிமிடெட், டிக்சன் டெக்னாலஜிஸ் இந்தியா மற்றும் ஃபாக்ஸ்கானின் பாரத் எஃப்ஐஎச் போன்ற முக்கிய இந்திய சப்ளையர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டது.

இதற்கிடையில், கூகிள் தனது சேவையை நாடு முழுவதும் உள்ள பல நகரங்களில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்தது. தற்போது வரை இந்தியா முழுவதும் 27 நகரங்களில் 28 சேவை மையங்கள் உள்ளன. இதேபோல, பிரபலமான ஆப்பிள் நிறுவனமும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஐபோன் உற்பத்தியை இந்தியாவில் தொடங்கி, ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்