கடந்த சில நாட்களாக கூகுள் நிறுவனம் அதன் மெசேஜ் (Google Message) பயன்பாட்டில் பல புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது. இவ்வாறு வெளியாகும் அம்சங்கள் நேரடியாக மெட்டாவிற்கு சொந்தமான வாட்ஸ்அப் உடன் போட்டியிடும் வகையில் உள்ளன. ஏனெனில் இந்த அம்சங்கள் டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப்பில் நாம் வழக்கமாகப் பார்க்கும் அம்சங்கள் ஆகும்.
சமீபத்தில் பீட்டா பயனர்களுக்காக ஃபோட்டோமோஜி, குரூப் சாட், ஆடியோ மெசேஜ் நாய்ஸ் கேன்சல் மற்றும் அனிமேஷன் ஸ்டிக்கர்கள் ஆகியவற்றை கூகுள் வெளியிட்டது. இதில் ஃபோட்டோமோஜி என்ற புதிய அம்சத்தில் உங்கள் தனிப்பட்ட புகைப்படங்களைப் பயன்படுத்தி ஈமோஜியை உருவாக்கலாம்.
நமது புகைப்படத்தை வைத்து தனியாக ஈமோஜி செய்வதற்கு ஆப்கள் இருப்பினும் இந்த அம்சத்தை தனது பயண்பாட்டினுள் கூகுள் கொண்டுவந்துள்ளது. இந்த ஃபோட்டோமோஜி அம்சம் ஆனது கூகுள் மெசேஜில் இருக்கக்கூடிய ஆர்சிஎஸ் (RCS) சாட்களில் மட்டுமே வேலை செய்கிறது. அடுத்ததாக, இதுவரை தனி நபருக்கு மட்டுமே மெசேஜ் அனுப்ப முடியும் என்பதை மாற்றி, குரூப் சாட் (Group Chat) என்பதை புகுத்தியுள்ளது.
இதனால் வாட்ஸ்அப்பில் குரூப் சாட் செய்வதைப்போல இதிலும் செய்ய முடியும். இந்த அம்சங்களைத் தவிர, கடந்த மாதம் குறிப்பிட்ட பீட்டா பயனர்களுக்கு வெளியிடப்பட்ட பீட்டா வெர்சனில், நாம் ஒருவருக்கு அனுப்பிய மெசேஜை எடிட் செய்வதற்கான வசதியைக் கொண்டு வந்தது. இதனால் நீங்கள் தவறாக அனுப்பிய மெசேஜை குறிப்பிட்ட நிமிடங்களுக்குள் எடிட் செய்ய முடியும்.
இதே அம்சம் கடந்த ஆண்டு ஐமெசேஜ் மற்றும் வாட்ஸ்அப்பிலும் வெளியானது. இதில் ஐமெசேஜ் பயன்பாட்டில் அனுப்பிய மெசேஜை திருத்த உங்களுக்கு இரண்டு நிமிடங்கள் மட்டுமே இருக்கும். ஆனால், வாட்ஸ்அப்பில் 15 நிமிடங்கள் உள்ளன. கூகுள் மெசேஜிக்கான இந்த அம்சம் இன்னும் அதன் மேம்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.