ஆண்ட்ராய்டு நேவிகேசன் பாருக்கு ஆப்பு வைத்தது கூகுள் நிறுவனம்..!
கூகுள் நிறுவனம், ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் நிலையாக இருக்கும் நேவிகேசன் பாருக்கு முடிவு கட்டப்போகிறது . இணையதளத்தில் வெளியான சில அறிக்கைகளின் படி, ஆண்ட்ராய்டு பி வெர்சனில் பேக், ஹோம் மற்றும் ரீசன்ட் ஆப்ஸ் உள்ள நேவிகேசன் பார் இருக்காது எனவும், அதற்கு பதில் மாத்திரை வடிவிலான ஹோம் பட்டன் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஹோம் பட்டன், ரிசன்ட் ஆப்ஸ் வேலையையும் சேர்த்து இரண்டு வேலை செய்யவுள்ளது. பயனர்கள் அந்த மாத்திரை வடிவ ஐகானை தொடுவதன் மூலம் முகப்பு பக்கத்திற்கு(ஹோம்) செல்லலாம், மேலும் அதை மேல்நோக்கி ஸ்வைப் செய்வதன் மூலம் சமீபத்திய செயலிகளை (ரிசன்ட் ஆப்ஸ்) திறக்க முடியும்.
ஆனாலும், மாத்திரை வடிவ ஐகானை இரு முறை தட்டுவதன் மூலம், கடைசியாக திறந்த இரு செயலிகளுக்கு இடையே மாறலாமா என்பதை தெளிவுபடுத்தவில்லை. இந்த வசதி தற்போது கூகுள் பிக்சல் மற்றும் நெக்சஸ் கருவிகளில் இயங்குகிறது. மேலும் அந்த அறிக்கையில், செயலிகளின் பட்டியல் கிடைமட்டமாக நகர்த்தும் வகையில் இருக்கும் என்றும், மேல்நோக்கி ஸ்வைப் செய்யும் போது செயலிகள் மூடிவிடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நேவிகேசன் மாற்றம் ஐபோன் எக்ஸ் ன் ஐ ஓ.எஸ் போலவே இருப்பதாகவும், ஆனாலும் ஏற்கெனவே செயலிகளை பயன்படுத்தும் பயனர்களுக்காகவே ஹோம் பட்டன் நீக்கப்படாமல் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மாத்திரை வடிவ ஹோம் பட்டனை அழுத்தி பிடிக்கும் போது, எப்போதும் போல் கூகுள் அசிஸ்டென்ட் இயங்கும் எனவும், அதில் எந்த மாற்றமும் செய்யப்படாது எனவும் அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
தேவைக்கேற்ப பின்நோக்கி செல்லும் பட்டன்(Back Button) தோன்றி மறையும். எனவே, முகப்புபக்கம் போல தேவையில்லாத இடத்தில் பேக் பட்டன் காட்டப்படாது.