சேட் ஜிபிடியை ஓரம்கட்ட வருகிறது ‘ஜெமினி AI’..! கூகுளின் அடுத்த மாஸ்டர் பிளான்..?
கூகுளின் முன்னணி AI நிறுவனம் டீப் மைண்ட் சாட் ஜிபிடிக்கு போட்டியாக புதிய AI தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது.
மென்பொருள் தொழில்நுட்பத்தில் மிகவும் பிரபலமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம் தான் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம். இது நுட்பமான இயந்திரங்களை உருவாக்கி மனிதர்களைப்போல செயல்பட வைக்கும் ஒரு நுணுக்கமான தொழில்நுட்பம் ஆகும். மனிதர்களால் செய்யமுடியாத செயல்களை கூட இந்த தொழில்நுட்பத்தின் மூலம் செய்யமுடியும். இதனால் கல்வி, விவசாயம் உள்ளிட்ட பல துறைகளில் பலவித மாற்றங்களை கொண்டு வரப்பட்டுள்ளன
Chat GPT:
கடந்த 2022ம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனமான OpenAI, சாட் ஜிபிடி (Chat GPT) என்னும் AI -ஐ அறிமுகம் செய்தது. இந்த AI அறிமுகமான சில வாரங்களிலேயே பத்து லட்சம் பயனர்களை ஈர்த்தது. இது நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கிறது. எந்த மனிதனை போலவே கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதும் திறன் கொண்டுள்ளது.
Google Bard:
இதனையடுத்து, ChatGPTக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் பார்ட் (Bard) எனும் AI -ஐ அறிமுகம் செய்தது. இந்த பார்ட் முதலில் சோதனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டாலும், அதில் இருந்த சிறு தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதன்பின், கூகுள் அந்த கோளாறுகளை சரிசெய்து பார்ட் AI-யை இந்தியா உட்பட 180க்கும் மேற்பட்ட நாடுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. பார்ட் இன்னும் மேம்பாட்டில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Google DeepMind:
இதற்கிடையில் தற்பொழுது கூகுளுக்குச் சொந்தமான முன்னணி AI நிறுவனமான டீப் மைண்ட் (DeepMind), OpenAI இன் ChatGPT தொழில்நுட்பத்தை மிஞ்சக்கூடிய ஜெமினி எனப்படும் புதிய AI அமைப்பை உருவாக்கி வருகிறது. முதன்முதலில் இந்த அமைப்பு கடந்த மாதம் கூகுளின் டெவலப்பர் மாநாட்டில் வெளியானது.
Gemini AI:
இது குறித்து கூறிய டீப் மைண்ட் தலைமை நிர்வாக அதிகாரி டெமிஸ் ஹசாபிஸ், ஜெமினி (Gemini AI) பயன்படுத்தப்பட்டுள்ள AlphaGo இன் நுட்பங்கள், இதற்கு திட்டமிடுவதற்கும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் உதவும் என்றும் அத்துடன் உரையை பகுப்பாய்வு செய்யும் திறன் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
மற்ற AI அமைப்பை போல இந்த ஜெமினியிலும் உரையை உள்ளிடுவதன் மூலம் நமக்கு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் இந்த ஜெமினி AI மாதிரி இன்னும் செயல்பாட்டில் உள்ளது மற்றும் இதனை முடிக்க பல மாதங்கள் ஆகலாம். இதன் மேம்பாட்டிற்கு கோடிக்கணக்கான டாலர்கள் செலவாகும் என்றும் கூறப்படுகிறது.