பிளிப்கார்ட் நிறுவனம் சிங்கப்பூரைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனத்திடமிருந்து நிதி!
பிளிப்கார்ட் நிறுவனம் சிங்கப்பூரைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனத்திடமிருந்து ரூ.4,843 கோடி நிதி திரட்டியுள்ளது. இந்த நிதியை இந்தியாவில் தனது சந்தையை விரிவுபடுத்துவதற்காக செலவிட உள்ளது.அலிபாபா, அமேசான் போன்ற ஆன்லைன் போட்டியாளர்களை சமாளிக்க இந்த நிதியை முதலீடு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கப்பூர் முதலீட்டு நிறுவனத்திடமிருந்து பிளிப்கார்ட் இ-காமர்ஸ் தளத்தின் விரிவாக்கத்துக்கு ரூ.4,472 கோடியும், பிளிப்கார்ட் இண்டர்நெட் நிறுவனத்துக்கு ரூ.370.90 கோடியும் திரட்டியுள்ளது. பிப்ரவரி மாதத்தில் இந்த முதலீடு திரட்டப்பட்டுள்ளது என்றும், இது தொடர்பான ஆவணங்களை பிளிப்கார்ட் நிறுவனம் கம்பெனி பதிவாளருக்கு அனுப்பியுள்ளது என்றும் தகவல் அறிந்தவர்கள் கூறியுள்ளனர்.
அமேசான் நிறுவனம் இந்திய இ-காமர்ஸ் சந்தையில் கணிசமான பங்குகளை பிரித்துவரும் நிலையில் அதற்கு போட்டியாக தனது தொழிலை விரிவாக்கம் செய்ய இந்த நிதியை பிளிப்கார்ட் பயன்படுத்த உள்ளது. கடந்த ஆண்டில் இரண்டு கட்டமாக, டென்சென்ட், இ-பே, மைக்ரோசாப்ட் மற்றும் சாப்ட் பேங்க் குழுமத்திலிருந்து 400 கோடி டாலரை பிளிப்கார்ட் திரட்டியது. அதற்கு அடுத்து தற்போது பிளிப்கார்ட் நிதி திரட்டியுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பிளிப்கார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்வது தொடர்பாக பேசிய சாப்ட் பேங்க் குழும தலைமைச் செயல் அதிகாரி மாசயோஷி சன், தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் பிளிப்கார்ட் நிறுவனத்தில் முதலீட்டை அதிகரிக்க உள்ளோம் என்று குறிப்பிட்டிருந்தார்.
தவிர பிளிப்கார்ட் நிறுவனம் அமெரிக்காவின் முக்கிய சில்லரை வர்த்தக நிறுவனமான வால் மார்ட் நிறுவனத்திடமிருந்து நிதி திரட்டவும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய இ-காமர்ஸ் துறையின் ஒட்டுமொத்த ஆண்டு வளர்ச்சி விகிதம் 30 சதவீதமாக உள்ளது. 2027-ம் ஆண்டுக்குள் 20,000 கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டும் என்று மார்கன் ஸ்டான்லி நிதிச் சேவை நிறுவனம் கணிப்பை வெளியிட்டுள்ளது
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.