மனித மூளையில் நியூராலிங்க் சிப்… மிக பெரிய முன்னேற்றம்.! மஸ்க் அறிவிப்பு.!
சென்னை: நியுராலிங்க் நிறுவனம் உருவாக்கிய டெலிபதி சிப் முன்னேற்றம் கண்டுள்ளது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் சமூக வலைதள பக்க நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், நியூராலிங்க் எனும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் மூலம், கை, கால் செயலிழந்த ஒரு மனிதன் தான் நினைக்கும் செயலை கணினி , மொபைல் வாயிலாக செய்ய நினைக்கும் செயல்களை செய்யும்படியாக மூளையில் பொருத்தும் வகையில் சிப் (Chip) தயாரிக்கும் ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறது.
இதனை முதற்கட்டமாக விலங்குகளில் வைத்து சோதனை செய்த நியூராலிங்க் நிறுவனம், அடுத்ததாக அமெரிக்க அரசின் அனுமதி பெற்று மனிதருக்கு பொருத்தி சோதனை செய்தது. அவ்வாறு முதன் முதலாக நியூராலிங்க் உருவாக்கிய டெலிபதி சிப்-ஆனது, நோலன் ஆர்பா என்ற நபரின் மூளையில் பொருத்தப்பட்டு வெற்றி கண்டது. இதனை அடுத்து அரசு அனுமதியுடன் அடுத்தகட்டத்தை நோக்கி எலான் மஸ்க் நிறுவனம் நகர்ந்துள்ளது.
இது தொடர்பாக எலான் மஸ்க் கூறுகையில், மனித மூளை-கணினியின் இடைமுக நிறுவனமான நியூராலிங்க், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கள் முழு உடல் கட்டுப்பாட்டை மீட்டெடுப்பதில் குறிப்பிட்ட அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது என்றும், நீண்ட காலமாக, துண்டிக்கப்பட்ட நரம்பு சிக்னல்களை முதுகுத்தண்டில் உள்ள இரண்டாவது நரம்பியல் இணைப்புடன் இணைக்க முடியும் என்றும் அதன் மூலம் முழு உடல் கட்டுப்பாட்டை மீட்டெடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
இந்த நியுராலிங்க் டெலிபதி சிப், முதன் முதலாக பொருத்தி கொண்ட நோலன் ஆர்பா என்பவரின் அனுபவம் பற்றி நிறுவனம் பகிர்ந்துள்ளது. நியூராலிங்க் சிப் பயன்படுத்தி, தனது நண்பர்களுடன் சதுரங்கம் உள்ளிட்ட ஆன்லைன் கணினி கேம்களை விளையாடினார். இணையத்தில் பல்வேறு தேடல்களை மேற்கொண்டார். சமூக வலைதளத்தில் நேரலை (Live) செய்து உரையாடினார். மேலும், மேக்புக்கில் (MacBook) பிற பயன்பாடுகளைப் பயன்படுத்தினர் என்று நியுராலிங்க் நிறுவனம் கூறியது.
சமுக வலைத்தளம் வாயிலாக உலகளாவிய நண்பர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருடன் மீண்டும் இணைவதற்கு இந்த தொழில்நுட்பம் அவருக்கு மிகவும் உதவியது என்று ஆரபா கூறினார். எல்லா நேரங்களிலும் மற்றொருவரின் உதவியின்றி மீண்டும் சொந்தமாகச் செய்யும் திறனையும் நியூராலிங்க் உருவாக்கிய சிப் அவருக்கு அளித்துள்ளது.