காந்த ஆற்றல் பூமியில் குறைகிறதா?
தென் அட்லாண்டிக் கடல் பகுதியில், சிலி நாட்டிலிருந்து, ஜிம்பாப்வே வரையிலுள்ள பகுதியில், பூமிக்கு இயற்கையிலேயே உள்ள காந்த விசை குறைவாக இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த குறைபாடு, 1958லேயே கண்டறியப்பட்டதுதான் என்றாலும், இந்த பகுதியின் காந்த விசை, ஆண்டுகள் செல்லச் செல்ல குறைந்த படியேதான் உள்ளது என்பதை, அண்மையில் இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் அய்ஸ்லாந்து விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
அப்படியென்றால், பூமிக்கு ஏதாவது பாதிப்புகள் வருமா? முதலில் புவியீர்ப்பு விசைக்கும் இதற்கும் தொடர்பில்லை என்பதை தெரிந்து கொள்வது அவசியம். இரு பொருட்களின் எடையை வைத்து, பெரிய பொருள் சிறிய பொருளை ஈர்த்துக்கொண்டே இருக்கும் என்பது, பிரபஞ்ச விதி. இதன்படி பூமி எனும் ராட்சதப் பந்து, அதன் மீதுள்ள மனிதர்கள் உட்பட அனைத்தையும், தன்னை நோக்கி ஒரே வேகத்தில் ஈர்த்தபடியே உள்ளது. இதுதான் புவியீர்ப்பு விசை.
ஆனால், பூமியின் காந்த விசை, தென், வட புலங்களைக் கொண்டு, பூமியை காக்கிறது. பிர பஞ்சம் வீசும் ஆபத்தான கதிர்கள் உள்ளே வராமல் தடுக்கக்கூடிய கவசமாகவும், திசைகளை உணர்த்தும் புலமாகவும் அது இருக்கிறது. சரி, ஏன் குறிப்பிட்ட இடத்தில் அந்த விசை குறைவாக இருக்கிறது? இதற்கு மூன்று நாட்டு விஞ்ஞானிகளும் சொல்லும் விளக்கம், பூமியின் வட, தென் துருவ காந்தப் புலம் இரண்டு அல்லது மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி துருவங்கள் திருப்பிப்போடப்படுவது நடக்கிறது.
அதன்படி, கடைசியாக துருவ மாற்றம் ஏழு லட்சம் ஆண்டுகளுக்கு முன் நடந்தது. ஆனால், தென் அட்லாண்டிக் பகுதியில் புவியின் காந்தம் பலவீனமாக இருப்பதை வைத்து, துருவ மாற்றம் ஏற்படும் என, சொல்லிவிட முடியாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
துருவங்கள் மாறும் தருவாயில், பிரபஞ்ச கதிர்வீச்சு அதிகம் பூமியின் வளி மண்டலத்திற்குள் வரலாம் என்றாலும், பலர் அவ நம்பிக்கையாளர்கள் கணிப்பதைப் போல பேரிடர்கள் ஏதும் நிகழாது. அதிகபட்சமாக, நாம் பழைய திசைமானிகளை விட்டுவிட்டு, புதிய திசைமானிகளை வாங்கவேண்டியிருக்கும் என்கின்றனர், ‘நாசா’ விஞ்ஞானிகள்.