ஒரு கோடி ரூபாய் பேரம்.? ஜியோ-ஹாட்ஸ்டார்-ஐ சொந்தமாக்கிய ஐடி வல்லுநர் வெளியிட்ட அறிக்கை.!
JioHotstar.com எனும் இணையதள பக்கத்தை சொந்தமாக்கிய டெல்லியை சேர்ந்த ஐடி வல்லுநர், தற்போது தனது நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
டெல்லி : இணையத்தில் google.com, yahoo.com என அந்தந்த நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் பெயர் அடங்கிய .com, .in என இணையகள முகவரியை தங்களுக்கானதாக வாங்கி வைத்துக்கொள்ளும். அந்த நிறுவனத்தை பற்றி இணையத்தின் வாயிலாக அறிந்து கொள்ள விரும்புபவர்கள் அந்த இணையதள முகவரியை தொடர்புகொள்வர்.
சில சமயம் பிரபல நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் பெயர் அடங்கிய இணையதள முகவரியை வாங்க தவறினாலோ, அல்லது அதே போல வேறு பெயரை கொண்டோ இணையதள முகவரிகள் உருவாக்கப்படும். அப்படி ஒரு சம்பவம் ஜியோ மற்றும் ஹாட் ஸ்டார் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அதாவது, டெல்லியினை சேர்ந்த ஒரு ஐடி வல்லுநர் JioHotstar.com எனும் இணையதளத்தை தனதாக்கிவிட்டார். இந்த இணையதள முகவரி யாருக்கேனும் வேண்டும் என்றால் 93,345 யூரோ (பிரிட்டன் பவுன்ட்) இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 கோடி என நிர்ணயம் செய்திருந்தார் எனக் கூறப்படுகிறது.
ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனங்களுடன் சட்ட போராட்டம் எதிர்கொள்ளவும் தயார் நிலையில் இருப்பதாகவும், சட்டரீதியில் எந்த தவறும் செய்யவில்லை என்றும் ஐடி வல்லுநர் தெரிவித்து வந்திருந்த நிலையில் தற்போது ஓர் அறிக்கை மூலம் அவர் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், இணையதள மக்களுக்கு நன்றி, எனக்கு துணையாக இருந்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், லண்டன் கேம்பிரிட்ஜ் நீதிமன்றம், ஜெர்மனி நீதிமன்ற வல்லுநர்கள் வரையில் எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் எனது நன்றி.
நான் உருவாக்கிய முகவரி (Domain) ஒரு இணையதள சொத்து. அதனை நான் உபயோகிக்கலாம் அல்லது வேறு யாருக்கேனும் விற்கலாம். அதனை செய்யக்கூடாது என யாரும் என்னிடம் சொல்ல முடியாது. இதற்கு சட்டபூர்வ அனுமதி இருக்கிறது. அதனை தான் நான் செய்தேன். ஆனால் எனது குடும்பத்தினர் அதிகமாக பயந்துவிட்டனர். நான் இந்த டொமைனை விட்டுக்கொடுக்காமல் அதற்காக சட்டப் போராட்டம் நடத்த வேண்டும் என்று பல சட்ட வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஆனால், ஒரு பெரிய நிறுவனத்திற்கு எதிராக இதனை தொடர எனக்கு நேரமும், அதற்கான நிதி ஆதாரங்களும் இல்லை. எனக்கு ஒருவேளை இதனை நிறுத்தக்கோரி சட்டப்பூர்வ உத்தரவு வந்தால், நான் அதற்கு ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இதற்காக அவர்கள் ஒரு பைசா கூட கொடுக்காமல் இருக்க வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அவர்கள் கருணையின் அடிப்படையில் அந்த முகவரிக்குரிய தொகையை வழங்குவார்கள் என்று நம்புகிறேன்.
சமூக வலைதளங்களில் எனக்காக ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. இதேபோல மற்றொரு வாய்ப்பு விரைவில் வரும் என்று நம்புகிறேன். நல்ல எதிர்காலத்திற்கான நம்பிக்கை மட்டும் என்னிடம் உள்ளது. தீங்கிழைக்கும் நோக்கம் எனக்கில்லை. இனி இந்த தளம் (JioHotstar) விரைவில் ஆஃப்லைனில் இருக்கும். ” என JioHotstar.com தளத்தை சொந்தமாக்கிய டெல்லி ஐடி வல்லுநர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.