வாட்ஸ் ஆப்-க்கு போட்டியாக வந்துவிட்டது கிம்போ அப்..!
யோகா குரு பாபா ராம்தேவின் சொந்த நிறுவனமான பதஞ்சலி கடந்த 2006-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் பற்பசை, தேன், நூடுல்ஸ், கூந்தல் தைலம், சமையல் எண்ணெய், சோப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
பதஞ்சலி தயாரிப்புப் பொருள்கள் ரசாயனக் கலப்பு இல்லை என்றும், இயற்கையாக உள்நாட்டில் தயாராகும் பொருட்கள் என்றும் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் நாடு முழுவதும் ஏராளமான மக்கள் நம்பிக்கையுடன் பதஞ்சலி பொருட்களை வாங்கி சென்று பயன்படுத்தி வருகின்றனர். ஆன்லைனிலும், தனித்தனியாக ஷோ ரூம்களை அமைத்தும் இந்தியா முழுவதும் இவருடைய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அண்மையில், பிஎஸ்.என்.எல் உதவியுடன் தொலைத்தொடர்பு துறையிலும் பாபா ராம் தேவ் தடம் பதித்தார். சுதேதி சம்ரித்தி என்ற சிம் கார்டை பாபா ராம்தேவ் அறிமுகப்படுத்தி இருந்தார். இந்த சிம் கார்டில் ரூ.144-ல் அன்லிமிடெட் அழைப்புகள், 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ்.கள் என பல்வேறு அதிரடி சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. முதற்கட்டமாக பதஞ்சலி நிறுவன ஊழியர்களுக்கு இந்த சிம்கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விற்பனைக்கு வரவுள்ளது.
சிம் கார்டை அடுத்து, இந்தியாவில் கிட்டத்தட்ட 20 மில்லியனுக்கு அதிகமான வாடிக்கையாளர்களை கொண்ட வாட்ஸ்-ஆப் செயலிக்கு போட்டியாக பதஞ்சலி நிறுவனம் “கிம்போ” என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. “கிம்போ” செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கிம்போ” செயலி வாட்ஸ-ஆப் செயலிக்கு கடும் போட்டியாக இருக்கும் என்றும், இந்தியாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெரும் எனவும் விளம்பரப் படுத்தப்பட்டு வருகிறது. கிம்போ என்ற சொல், சம்ஸ்கிருத மொழிச்சொல் என்று கூறப்படுகிறது.