இனிமே மனிதனை போல சாட் ஜிபிடியால் பேச முடியும்! ஓபன் ஏஐ வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
சாட் ஜிபிடி ஆனது கவிதைகள் முதல் கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்கள் வரை எழுதித் தரக்கூடிய திறன் கொண்டது. அந்தவகையில் தற்போது எழுத்து வடிவில் நாம் கேள்விக்கு மட்டுமே இந்த சாட் ஜிபிடி பதில் அளிக்கிறது. இதனை மேம்படுத்த ஓபன் ஏஐ நிறுவனம் தொழில் துறையை புரட்டி போடக்கூடிய வகையில் சாட் ஜிபிடி-ல் புதிய அம்சத்தை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது.
இந்த புதிய அம்சம் மூலம் புகைப்படம் வாயிலாகவோ அல்லது குரல் மூலமாகவோ உரையாடல்களை நடத்தி, நம்முடைய கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ளலாம். இது மனிதனை போன்ற குரலில் பேசக்கூடிய, ஓபன் ஏஐ நிறுவனத்தின் புதிய டெக்ஸ்ட்-டு-ஸ்பீச் (TTS) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உரையாடும் திறன் கொண்டதாக இருக்கும்.
புதிய டெக்ஸ்ட்-டு-ஸ்பீச் மாடலால் இயக்கப்படும் இந்த அம்சத்தில் ஜூனிபர், ஸ்கை, கோவ், எம்பர் மற்றும் ப்ரீஸ் ஆகிய ஐந்து வெவ்வேறு குரல்களைத் தேர்வுசெய்து பயனர்கள் உரையாடல் செய்ய முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக கூகுள், சேட் ஜிபிடிக்குப் போட்டியாக பார்ட் என்ற சேட்போட்டை இந்தியா உட்பட 180 நாடுகளில் அறிமுகப்படுத்தியது.
எனவே, இந்த குரல் அம்சம் கூகுளின் வாய்ஸ் அசிஸ்டென்ட், ஆப்பிளின் சிரி மற்றும் அமேசானின் அலெக்சா போன்ற குரல் மூலம் இயங்கக்கூடிய தொழிநுட்பத்திற்கு போட்டியாக இருக்கலாம். இந்த அம்சத்தோடு புகைப்படம் வாயிலாகவும் நீங்கள் கேள்வி கேட்டு சாட் ஜிபிடியுடன் உரையாடலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் இரவு உணவிற்கு என்ன செய்யலாம் என்பதைத் தெரிந்து கொள்ள பிரிட்ஜில் இருக்கும் பொருட்களைப் படம் எடுக்கவும்.
பிறகு, இந்த பொருட்களை வைத்து இரவு உணவிற்கு என்ன செய்யலாம் என்று கேட்கும்போது, சாட் ஜிபிடி அதற்கான பதிலை அளிக்கும். இந்த அம்சங்கள் அடுத்த இரண்டு வாரங்களில் சாட் ஜிபிடி பிளஸ் மற்றும் எண்டர்பிரைஸ் பயனர்களுக்கு கிடைக்கும். இந்தியாவில் ஒரு மாதத்திற்கு சாட் ஜிபிடி சப்ஸ்கிரிப்சனுக்கு ரூ.1,950 செலுத்த வேண்டும். மேலும், ஐஓஎஸ் மற்றும் ஆன்ட்ராய்டில் குரல் உரையாடல் அம்சம் மட்டுமே இருக்கும். படத்தை அடையாளம் காணும் அம்சம் அனைத்திலும் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது