வாட்ஸ் அப் அழைப்புகளில் மோசடி… எச்சரிக்கும் மத்திய அரசு!
WhatsApp : +92 இல் தொடங்கும் நம்பர்களில் இருந்து வரும் வாட்ஸ்அப் அழைப்புகளுக்கு எதிராக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொலைத்தொடர்பு துறை (DoT) பெயரில் வரும் போலி வாட்ஸ்அப் அழைப்புகள் மொபைல் பயனர்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், அதுகுறித்து மத்திய அரசு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதாவது, அரசு அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து வெளிநாட்டு மொபைல் எண்களில் இருந்து வாட்ஸ்அப் அழைப்புகள் மூலம் மோசடி நடப்பது குறித்த ஆலோசனைகளை தொலைத்தொடர்புத் துறை வெளியிட்டுள்ளது.
அதில், சைபர் குற்றவாளிகள் தொலைத்தொடர்பு துறையில் இருந்து பேசுவதாகக் கூறி ஏமாற்று வேலையில் ஈடுபடுவதாகவும், சொல்வதை செய்யாவிட்டால் மொபைல் எண் துண்டிக்கப்படும் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் என அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதுவும் குறிப்பாக +92-xxxxxxxxxx போன்ற வெளிநாட்டு மொபைல் எண்களில் இருந்து வரும் வாட்ஸ்அப் அழைப்புகளில் இந்த மோசடி அதிகமாக நடந்து வருகிறது. இதுபோன்ற எண்களில் இருந்து மோசடி செய்பவர்கள் மக்களை அச்சுறுத்தி, அவர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பெற்று நிதி மோசடிகளை மேற்கொள்ள முயற்சி செய்கின்றனர்.
இதுபோன்ற அழைப்புகளைச் செய்ய யாரையும் தொலைத்தொடர்புத் துறை தனது சார்பாக அங்கீகரிக்கவில்லை என்றும் மக்கள் விழிப்புடன் உஷாராக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், அதுபோன்ற போலியான அழைப்புகள் வரும்போது எந்தத் தகவலையும் பகிர வேண்டாம் எனவும் கூறியுள்ளது.
மோசடி கால்கள் குறித்து www.sancharsaathi.gov.in இணையதளத்தின் மூலம் புகார் அளிக்கலாம் என்றும் நிதி மோசடிக்கு உள்ளானால், சைபர் கிரைமின் 1920 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு உதவி பெறலாம் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம் எனவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.