ஃபேன்ஸுக்காவே கொண்டு வந்துருக்காங்க.! அனல் பறக்கும் சாம்சங்கின் புதிய ஃபேன் எடிஷன் சீரிஸ்.!
சாம்சங் நிறுவனம் தனது ரசிகர்களுக்காக புதிய ஃபேன் எடிஷன் சீரிஸை உலக அளவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஸ்மார்ட்போன் (கேலக்ஸி எஸ்23 எஃப்இ), டேப்லெட் (கேலக்ஸி டேப் எஸ்9 எஃப்இ, எஸ்9 எஃப்இ+) மற்றும் பட்ஸ் (கேலக்ஸி பட்ஸ் எஃப்இ) போன்ற சாதனங்கள் உள்ளன.
கேலக்ஸி எஸ்23 எஃப்இ ஸ்மார்ட்போன் ஆனது எஸ்23 ஸ்மார்ட்போன் சீரிஸ் ஸ்மார்ட்போனைப் போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
டிஸ்ப்ளே
கேலக்ஸி எஸ்23 எஃப்இ ஆனது 2340 x 1080 ரெசல்யூஷன் கொண்ட 6.4 இன்ச் (16.31 செமீ) அளவுள்ள எஃப்எச்டி+ டைனமிக் அமோலெட் 2 எக்ஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 60 ஹெர்ட்ஸ் முதல் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. 209 கிராம் எடையுள்ள இந்த ஸ்மார்ட்போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளது. நீர் மற்றும் தூசி எதிர்ப்புக்கான ஐபி68 ரேட்டிங் உள்ளது.
பிராசஸர்
இந்த ஸ்மார்ட்போனில் எந்த வகையான சிப்செட் உள்ளது என்பதை சாம்சங் வெளியிடவில்லை. இது விற்பனைக்கு வரும் நாடுகளின் சந்தைகளைப் பொறுத்து மாறுபடும் என்று நிறுவனம் கூறியுள்ளது. அதன்படி, 4 என்எம் எக்ஸினோஸ் 2200 அல்லது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் பயன்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ஒன் யுஐ 5 இல் இயங்குகின்றன. இதில் கைரேகை சென்சார், கைரோ சென்சார், ஜியோமேக்னடிக் சென்சார், ஹால் சென்சார், லைட் சென்சார், விர்ச்சுவல் ப்ராக்ஸிமிட்டி சென்சிங் உள்ளது.
கேமரா
எஸ்23 எஃப்இ ஸ்மார்ட்போனின் கேமரா அமைப்பைப் பொறுத்தவரையில் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எல்இடி ஃபிளாஷ் லைட்டுடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா, 12 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் ஓஐஎஸ் வசதியுடன் 3X ஆப்டிகல் ஜூம் கொண்ட 8 எம்பி டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. முன்புறம் உள்ள 10 எம்பி கேமரா மூலம் தெளிவான செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளை செய்ய முடியும்.
பேட்டரி
இந்த ஸ்மார்ட்போனில் 4,500 mAh திறன் கொண்ட லித்தியம்-அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய டைப்-சி சார்ஜிங் போர்டுடன் கூடிய 25 வாட்ஸ் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதை 30 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்ய முடியும். மேலும், 15 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் மற்றும், ரிவர்ஸ் சார்ஜிங் அம்சமும் உள்ளது. இதன்மூலம், மற்றொரு ஸ்மார்ட்போனையும் சார்ஜ் செய்ய முடியும்.
ஸ்டோரேஜ் மற்றும் விலை
மின்ட், கிரீம், கிராஃபைட், பர்பில் இண்டிகோ மற்றும் டேன்ஜரின் என ஐந்து வண்ணங்களில் கிடைக்கும் இந்த கேலக்ஸி எஸ்23 எஃப்இ ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. அதன்படி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டுகள் உள்ளன. எஸ்23 எஃப்இ ஆனது $599 (ரூ.49,844) விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் அதன் விலை தெரிவிக்கப்படவில்லை.
முன்பதிவு:
சாம்சங் கேலக்ஸி எஸ்23 எஃப்இ இந்தியா விலை இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு என்பது நாளை (அக்டோபர் 5) முதல் தொடங்குகிறது. டேப் எஸ்9 எஃப்இ மற்றும் கேலக்ஸி பட்ஸ் எஃப்இ ஆகியவை அக்டோபர் 10 முதல் விற்பனைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.