ரெடியா இருங்க! செப்டம்பரில் வெளியாகும் ஆப்பிள் பொருட்கள்?
சென்னை : ஆப்பிள் நிறுவனத்தின் அசத்தல் கேட்ஜட்ஸான போன் முதல் ஸ்மார்ட் வாட்ச் வரையில் வரும் செப்டெம்பர் மாதம் லாஞ்சாக உள்ளதெனத் தகவல் வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்தில் ஆப்பிள் நிறுவனத்தால் புது மாடல் ஐபோன்கள் முதல் சிறிய கேட்ஜெட்ஸ் வரையில் அறிமுகம் செய்யப்படும். இதனை ஒரு வழக்கமாகவே ஆப்பிள் நிறுவனம் கடைப்பிடித்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் அதாவது அடுத்த மாதம் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 முதல் ஸ்மார்ட் வாட்ச் வரை உள்ள கேட்ஜெட்ஸ்களை சந்தையில் விற்பனைக்குக் கொண்டுவர உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அதிலும் வரும் செப்டம்பர்-20ம் தேதி இந்த பொருட்களை வெளியிடும் நிகழ்வானது நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும் இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவலை ஆப்பிள் நிறுவனம் அறிவிக்கவில்லை. வணிக உலகில், ஸ்மார்ட்போன் சந்தையில் சுமார் 15 சதவீத பங்கை ஐபோன் மட்டுமே கொண்டுள்ளது. இதனால், அது எவ்வளவு விலை உயர்வாக வெளியாகம் ஐபோன்கள் இருந்தாலும் அதற்கென செலவழித்து வாங்கி உபயோகிக்கும் பயனர்கள் இருந்து கொண்டு தான் இருப்பார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஐபோன் 16 :
ஐபோன் 16 மாடலை பொறுத்தவரையில் அதன் பெரிய திரை மற்றும் மேம்படுத்தப்பட்ட புதிய கேமரா அம்சம் போன்றவை இருக்கும் எனப் பயனர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இதில், ஆப்பிள் ஏஐ (AI) அம்சம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 15 மாடலுடன் வெளியாக இருக்கும் ஐபோன் 16 மாடலை ஒப்பிடுகையில் பெரிய வேறுபாடுகள் இருக்காது என்றும் ஏஐ கேமரா மற்றும் சிறிய அப்டேட்களுடனுமே வெளியாகும் எனவும் எதிர்ப்பார்க்கிறார்கள்.
ஐபோன் 16 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை சுமார் இந்திய மதிப்பு படி ரூ.67,100 ரூபாயாக இருக்கலாம். ஐபோன் 16 Plus-ன் விலை ரூ. 75,500 ஆகவும் விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ச் சீரிஸ் 10 :
ஆப்பிள் 10வது ஜென் ஸ்மார்ட் வாட்சை, புதிதான அம்சங்களுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில், இந்த வாட்சின் வடிவமைப்பு வெளியானதாக ஒரு தகவல் வெளியாகிப் பரவி வந்தது. அதன்படி, அந்த வாட்சின் வடிவமைப்பைப் பார்க்கையில் முந்தைய வெர்ஷனை விட மெலிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வரவிருக்கும் வாட்சில் ரத்த அழுத்தம் மற்றும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் போன்றவற்றைக் கண்காணிப்பதற்கான புதிய வகை சென்சார் இடம் பெறலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், இது ஒரு அடுத்தகட்ட சிப்செட்டுடன் சில ஆப்பிள் ஏஐ அம்சங்களுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.