Apple Event 2023: தட்டுறோம்..தூக்குறோம்..! இன்று களமிறங்குகிறது அட்டகாசமான ஐபோன் 15..!
ஐபோன் பிரியர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 12ம் தேதியான இன்று வெளியாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சீரிஸ் கலிபோர்னியாவின் குபெர்டினோவில் உள்ள ஆப்பிள் பூங்காவில் நடக்கும் ‘வொண்டர்லஸ்ட்’ என்ற நிகழ்வில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்த ஐபோன் 15 சீரிஸில் ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய நான்கு மாடல்கள் இருக்கலாம். இதில் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்கள் ஐபோன் 14 ப்ரோ மாடலில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது, ஐபோன் 14 ப்ரோ ஆனது ஏ16 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுகிறது. அதே போல ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ் ஸ்மார்ட்போனிலும் இந்த சிப் இடம்பெறலாம். அதே நேரத்தில் ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் A17 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 15 ஆனது ஆப்பிள் ஐபோன் 14 ஐப் போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடலில் 6.1 இன்ச் டிஸ்ப்ளேவும், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் 6.7 இன்ச் டிஸ்ப்ளேவையும் கொண்டிருக்கலாம். இந்த மாடல்களில் நாட்ச்க்கு பதிலாக ஐபோனுக்கே உரித்தான டைனமிக் ஐலேண்ட் கட்அவுட் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் 15 இல் 48 எம்பி மெயின் கேமரா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் 48 எம்பி மெயின் கேமரா மற்றும் 12 எம்பி அல்ட்ராவைட் கேமராவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்த ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு போன்களில் இருக்கும் யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலையானது ரூ.66,000 முதல் ரூ,90,000 வரை இருக்கலாம்.
நிகழ்வை எப்படி பார்ப்பது.?
ஆப்பிளின் ‘வொண்டர்லஸ்ட்’ என்ற இந்த மாபெரும் நிகழ்வானது இன்று இரவு 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது. ஐபோன் மட்டுமின்றி, ஏர்போட்ஸ், வாட்ச்கள் மற்றும் பிற ஆப்பிள் தயாரிப்புகளும் இந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தப்படும். இந்த நிகழ்வை ஆப்பிளின் அதிகாரபூர்வ யூடியூப் சேனல் https://www.youtube.com/watch?v=ZiP1l7jlIIA மற்றும் apple.com -ல் நேரலையில் காணலாம்.