கடந்த செப்டம்பர் 13ம் தேதி ஆப்பிள் நிறுவனம், ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. இதில் முக்கிய மாற்றமாக மற்ற ஐபோன்களில் இருப்பது போல அல்லாமல், ஆன்ட்ராய்டு போன்களில் இருக்கக்கூடிய யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட்டாக மாற்றியது.
இதைத்தொடர்ந்து தற்போது மிக முக்கிய அறிவிப்பை ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின் படி, ஆப்பிள் ஆர்சிஎஸ் (ரிச் கம்யூனிகேஷன் சர்வீசஸ்) மெசேஜிங் வசதியை ஐபோன்களில் கொண்டு வரவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வசதி அடுத்த ஆண்டு சாப்ட்வேர் அப்டேட் மூலம் தொடங்கப்படும் என்பதை ஆப்பிள் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளது.
அவர் கூறியதாவது, “அடுத்த ஆண்டின் பிற்பகுதியில், ஆர்சிஎஸ் மெசேஜ் வசதியானது ஐபோன்களில் சேர்க்கப்படும். தற்போது ஜிஎஸ்எம் சங்கம் வெளியிட்டுள்ள தரநிலைப்படி, எஸ்எம்எஸ் அல்லது எம்எம்எஸ் உடன் ஒப்பிடும்போது ஆர்சிஎஸ் மெசேஜ் வசதி சிறந்த அனுபவத்தை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இது ஐமெசேஜ் (iMessage) உடன் இணைந்து செயல்படும். இது ஆப்பிள் பயனர்களுக்கு சிறந்த மற்றும் பாதுகாப்பான மெசேஜிங் வசதியாக இருக்கும்.” என்று கூறியுள்ளார்.
ஆர்சிஎஸ் என்றால் என்ன.?
ஆர்சிஎஸ் என்பது நாம் வழக்கமாக உபயோகப்படுத்தும் எஸ்எம்எஸ் வசதியில் இருந்து சற்று மேம்பட்டதாக இருக்கும். இந்த ஆர்சிஎஸ் மெசேஜ் வசதியானது உங்கள் மொபைலில் இருக்கக்கூடிய மெசேஜிங் ஆப் மூலம் செயல்படுகிறது. இதில் ஆப்பிள் பயனர்கள் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு உயர்தர புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பவும், செய்திகள் எப்போது படிக்கப்படுகின்றன என்பதைப் பார்கவும் மற்றும் குழு அரட்டைகளில் ஈடுபடவும் முடியும்.
ஐமெசேஜ் என்ன ஆகும்.?
ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களில் ஏற்கனவே இருக்கக்கூடிய ஐமெசேஜ் சேவையை நீக்காமல், இந்த ஆர்சிஎஸ் மெசேஜ் வசதியைக் கொண்டுவருகிறது. ஐமெசேஜ் சேவை இப்போது இருப்பது போலவே ஐபோன் பயனர்களுக்கு இடையேயான அனைத்து தகவல்தொடர்புகளுக்கும் பயன்படுத்தப்படும் மெசேஜ் அனுப்பும் வசதியாக இருக்கும்.
ஆர்சிஎஸ் ஆனது எஸ்எம்எஸ் மற்றும் எம்எம்எஸ் ஆகியவற்றை மட்டுமே மாற்றும். ஆனாலும், எஸ்எம்எஸ் மற்றும் எம்எம்எஸ் சேவைகள் தொடர்ந்து பயனர்களுக்கு வழங்கப்படும். ஆர்சிஎஸ் ஆனது எஸ்எம்எஸ் சேவை போலல்லாமல், மொபைல் டேட்டா அல்லது வைஃபை மூலமாகவும் வேலை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.