மின்னலை திசை திருப்பிய ராட்சத லேசர்.. விஞ்ஞானிகள் சாதனை..!
சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட மின்னலை ராட்சத லேசரை பயன்படுத்தி விஞ்ஞானிகள் திசை திருப்பியுள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் மின்னலால் ஏற்படும் தாக்குதலை குறைப்பதற்காக ராட்சத லேசரை பயன்படுத்தி விஞ்ஞானிகள் மின்னலை திசை திருப்பியுள்ளனர். இந்த தொழில்நுட்பம் மூலம் மின் நிலையங்கள், விமான நிலையங்கள், ஏவுதளங்கள் மற்றும் பிற கட்டிங்கள் சேதமடைவதை தடுக்க முடியும் என்றும் மின்னலால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களையும் தடுக்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
ஐந்து டன் எடையுள்ள இந்த சாதனம் சுவிட்சர்லாந்தின் சாண்டிஸ் மலை பகுதியில் உள்ள 400 அடி தொலைத்தொடர்பு கோபுரத்திற்கு அருகில் நிறுவப்பட்டது. மின்னல் என்பது மேகங்களுக்கு இடையில் உருவாகும் ஒரு உயர் மின்னழுத்த வெளியேற்றம் ஆகும். இந்த டிரில்லியன் வாட் லேசர் ஒரு மெல்லிய லேசர் கற்றையை உருவாக்குகிறது. லேசர் கற்றை காற்று மூலக்கூறுகளை வெப்பப்படுத்தி மின்சாரத்தை வெளியேற்றுகிறது.
ஒவ்வொரு முறையும் 150 அடி வரை நான்கு மின்னல்களை இந்த லேசர் திசை திருப்புகிறது. ஒரு நொடிக்கு ஆயிரம் லேசர் துடிப்புகளை மேகங்களுக்குள் செலுத்துவதன் மூலம் பாதுகாப்பாக மின்னலை திசைதிருப்பி உலகின் பாதுகாப்பை சிறிதளவு மேம்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.