9000 பேருக்கு வேலை போகும் அபாயம்; 2-வது சுற்று பணிநீக்கம் அமேசான் அதிரடி.!
அமேசான் நிறுவனம் இரண்டாம் கட்ட பணிநீக்கமாக, மேலும் 9000 பேரை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
அமேசான் நிறுவனம் இந்த ஆண்டின் இரண்டாவது சுற்று பணிநீக்கத்தை தொடங்கியுள்ளது. அதன்படி மேலும் 9000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அமேசான் அறிவித்துள்ளது. இது குறித்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி, அதன் பணியாளர்களுக்கு மின்னஞ்சல் செய்தி அனுப்பியுள்ளது.
அந்த செய்தியில் குறிப்பிட்டதாவது, அமேசான் கடினமான நேரத்தை கடந்து வருவதாகவும், செலவைக் குறைக்க இந்த பணிநீக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அமேசான் நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதத்தில் 18,000 ஊழியர்களை ஏற்கனவே பணியிலிருந்து நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் அடிப்படையில் அமேசான் மொத்தம் 27,000 பேரை பணிநீக்கம் செய்துள்ளது. இது குறித்து, அமேசான் கடந்த சில வருடங்களில் அதிகளவில் ஆட்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது என்றும், இப்போது, பொருளாதார மந்தநிலையின் காரணமாக செலவுகளைச் சேமிக்கவும், இருக்கிற வளங்களை கவனமாகப் பயன்படுத்தவும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டியிருக்கும் என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விளக்கினார்.
பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு நிறுவனம் எப்போதும் ஆதரவாக இருக்கும் என்றும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் நிறுவனத்தின் சிஇஓ உறுதியளித்தார்.