360 டிகிரி கேமரா, டென்னிஸ் ரோபோ,3டி பேனா ..!
360 டிகிரி கேமரா
நமது விருப்பத்துக்கு ஏற்ப 360 டிகிரியிலோ அல்லது 180 டிகிரியிலோ படங்கள், வீடியோக்களை எடுக்க உதவும் சிறிய கேமரா. நேரடியாக ஸ்ட்ரீம் செய்யும் வசதி, படம் எடுத்தபின் ஃபோகஸ் செய்யும் வசதி உடையது. க்யூஓ கேம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
டென்னிஸ் ரோபோ
டென்னிஸ் களத்துக்கு வெளியே செல்லும் பந்துகளை எடுத்துத் தரும் ரோபோ. ஸ்மார்ட் ஃபோனுடன் இணைப்பதன் வழியாக கட்டளைகளை பிறப்பிக்கலாம். விளையாட்டு வீரர்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் இந்த ரோபோவின் பெயர் டென்னிபாட்.
3டி பேனா
காகிதம் இல்லாமல் வெறும் காற்றில் எழுதவும், வரையவும் உதவும் பேனா. 3டி பிரிண்டர்களில் பயன்படுத்தப்படும் கலர் பிளாஸ்டிக் தொழில்நுட்பத்தின்படி செயல்படுகிறது. வடிவமைப்பாளர்கள், ஓவியர்களுக்கு பயன்படும் இந்த பேனாவின் பெயர் லிக்ஸ்.
விளையாட்டு எலி
பூனைகள் விளையாடும் வகையில் எலியைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள ரோபோ. பூனைகளின் மனநிலையை அறிந்து சொல்லும் திறன் உடையது. 360 டிகிரி பார்க்கும் திறன் மூலம் பூனையின் இருக்கும் இடத்தைக் கண்டறியும். இதற்கு மவுஸர் என்று பெயரிடப்பட்டுள்ளனர்.
இடம் அறியும் கருவி
கூட்ட நெரிசல் அதிகமுள்ள இடங்களில் தொலைந்துபோன குழந்தைகளை கண்டறிதல், சுற்றுலா சென்ற நண்பர்களில் ஒருவர் மட்டும் வழிதவறி சென்றுவிட்டால் அவர் இருக்குமிடத்தை கண்டறிதல் போன்றவற்றுக்குப் பயன்படும் கருவி.ரேடியோ அலைவரிசை தொழில்நுட்பத்தில் இரண்டு கருவிகளை இணைத்துப் பயன்படுத்தலாம். ஃபோன், செயலி, மேப், வைஃபை என எதுவும் தேவையில்லை. லிங்கூ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
நகரும் வீடுகள்
பசிபிக் கடல் பகுதியில் உள்ள பாலினேசியா தீவுகளில் தகிட்டி தீவின் கடல் பகுதியில் மிதக்கும் நகரம் அமைக்கப்பட உள்ளது. அந்நாட்டு அரசுடன் இணைந்து பேபால் நிறுவனர் பீட்டர் தேல் முதற்கட்டமாக 5 கோடி டாலர் முதலீடு செய்துள்ளார். இங்கு 300 சொகுசு வீடுகள், மால்கள், அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. கால நிலைக்கு ஏற்ப இந்த கட்டிடங்கள் நகரும் தன்மையுடன் அமைக்கப்படும். 2022-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும்.