ஹலோ, நான் ஏ.ஐ. பேசுறேன்..!

Default Image

உங்கள் சார்பில் ஒரு ரோபோ தொலைபேசி உரையாடலை மேற்கொள்வதை நீங்கள் விரும்புவீர்களா? ஒரு ரோபோ உங்களுடன் தொலைபேசி வழியே உரையாடுவதை விரும்புவீர்களா? அதைவிட தான் ஒரு ரோபோ என வெளிப்படுத்திக்கொள்ளாமலே அது உரையாடலை மேற்கொள்வதை ரசிப்பீர்களா? ரோபோவுடன்தான் பேசினோம் எனத் தெரிந்துகொண்டால், ஏமாற்றப்பட்டதாக உணர்வீர்களா? ரோபோக்கள் மனித குரலில் பேசி உரையாடலை மேற்கொள்ளும் ஆற்றலைப் பெறுவதால் என்னென்ன விபரீதங்கள் ஏற்படும்?

இதுபோன்ற பல கேள்விகளை எழுப்பி, ரோபோ உரையாடலின் சாத்தியங்கள், சிக்கல்கள் குறித்த விவாதத்தை கூகுள் நிறுவனத்தின் சமீபத்திய அறிவிப்பு ஏற்படுத்தியிருக்கிறது. அண்மையில் நடைபெற்ற கூகுள் நிறுவனத்தின் டெவலப்பர்கள் மாநாட்டில் வழக்கம்போல புதிய சேவைகள், வசதிகள் தொடர்பான பல அறிவிப்புகள் வெளியாயின. இவற்றில் ஒன்றான ‘கூகுள் டியுப்ளக்ஸ்’ எனும் வசதிதான் அதிகம் கவர்ந்தது.

Image result for Google Duplex

‘கூகுள் டியுப்ளக்ஸ்’ என்பது ஆய்வு மூலம் கூகுள் உருவாக்கியுள்ள செயற்கை நுண்ணறிவு ஆற்றல் கொண்ட மென்பொருள் அமைப்பு. இந்த மென்பொருள் அமைப்பு, மனிதர்களைப்போலவே பேசி உரையாடல் மேற்கொள்ளக்கூடியது. இந்த ஆற்றலைத்தான் கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை, டெவலப்பர்கள் மாநாட்டில் அறிமுகப்படுத்தினார்.

ஆண்ட்ராய்டு போன்கள் உள்ளிட்ட சாதனங்களில் செயல்படும் இந்த வசதி, வருங்காலத்தில் ஒருங்கிணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘கூகுள் அசிஸ்டெண்ட்’ மென்பொருள் சேவையைப் பயனாளிகள் குரல் வழி கட்டளைகள் மூலம் இயக்கலாம். இதே பாணியில் பயனாளிகள் தொலைபேசி வழி முன்பதிவுகளை மேற்கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது என்பதைத்தான் மாநாட்டு மேடையில் சுந்தர் பிச்சை முன்னோட்டமாக நிகழ்த்திக் காட்டினார்.

Image result for Google Duplexஆக, வருங்காலத்தில் உங்கள் சார்பில் ‘கூகுள் அசிஸ்டெண்’டே இத்தகைய உரையாடலை மேற்கொண்டு சேவை அளிக்கும் சாத்தியம் இருக்கிறது என்பதுதான் கூகுள் சொல்லவந்த விஷயம்.

இத்தகைய டிஜிட்டல் உதவியாளர் சேவைகளை ஸ்மார்ட்போனிலும் பிற ஸ்மார்ட் ஹோம் சாதனங்களிலும், அமேசான், ஆப்பிள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களும் வழங்கி வருகின்றன. இந்தச் சேவையை மேம்படுத்துவதில் கடும் போட்டி நிலவும் நிலையில், கூகுள் தனது சேவையில் ‘டியுப்ளக்ஸ்’ நுட்பத்தின் வாயிலாகச் சாத்தியமாகக்கூடிய வசதியை, மென்பொருள் உரையாடலாக கூகுள் முன்னோட்டமாக காட்டியது.

இந்த உரையாடலின் சிறப்பம்சம் என்னவெனில், இது அச்சு அசல் மனித குரல் சாயலில் அமைந்திருந்ததுதான். குரல் மட்டுமல்ல; உரையாடலை நிகழ்த்திய விதமும் மனிதர்கள் போலவே இருந்தது. உரையாடலுக்கு நடுவே பதிலுக்காகக் காத்திருக்கும்போது, சும்மா இருக்காமல் ‘உம்’ கொட்டவும் செய்தது. இவை எல்லாம் சேர்ந்துதான் அந்த உரையாடல் மனிதர்கள் நடத்தும் உரையாடலைப்போலவே இருந்தது.

Image result for Google Duplexஇதேபோல, ரெஸ்டாரண்ட் ஒன்றில் உணவு மேஜைக்காக முன்பதிவு செய்யும் தொலைபேசி அழைப்பையும் சுந்தர் பிச்சை டெமோ காட்டினார். இந்த வசதி தற்போது பரிசோதனை வடிவில்தான் இருக்கிறது. இதன் பின்னே உள்ள ‘டியுப்ளக்ஸ்’ நுட்பம் செயற்கை நுண்ணறிவு சார்ந்தது என்பதால் உரையாடல்களின் தன்மைக்கேற்ப நுட்பங்களைக் கற்றுக்கொண்டுவிடலாம். மனிதர்கள் பேசும் பாணியிலேயே இயற்கையான மொழியில் தகவல்களைப் புரிந்துகொள்ளும் தன்மையும் இதனிடம் உண்டு.

Image result for Google Duplexஅதேநேரம், இந்த உரையாடல் கட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும். பெரும்பாலும் பயன்பாடு சார்ந்த விஷயங்களில் மட்டுமே இது செல்லுபடியாகும். குறிப்பாக, முன்பதிவு சார்ந்த மூன்று வித சேவைகளுக்கு மட்டுமே இது பயன்படும். அதன் பிறகு படிப்படியாக மேம்படுத்தப்படலாம்.

தொழில்நுட்பம் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திக்கொண்டிருக்கும் நிலையில் எதிர்கால சேவைகள், பிரமிக்க வைப்பதாக மட்டுமல்லாமல் மிரட்சியை அளிப்பதாகவும் இருக்கின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்