ஆய்வில் அதிர்ச்சி தகவல்!மொபைல் போனில் ஆப் பயன்பாடு குறித்து அதிர்ச்சி தகவல் ….
புதுமை இல்லாததால் மொபைல் ஆப் பயன்பாடு குறைகிறதா? என ஒரு ஆய்வு முடிவில் புதிய தகவல் வெளியாகியுள்ளது..
மக்களின் பல்வேறு தேவை, தகவல், பொழுதுபோக்கு உள்ளிட்டவற்றிக்கு மொபைல் ஆப் உருவாக்கப்படுகிறது. இருந்த இடத்தில் நேரடியாக பயன்பாட்டை பெற முடியும் என்பதால், மொபைல் போன் பயன்படுத்துவோர் ஆப்களை பெரிதும் விரும்புகின்றனர். இதனால், உணவு தேவை, டிக்கெட் முன்பதிவு என அன்றாட தேவைகளுக்கும், பல்வேறு தகவல்களை பெறவும் ஆப்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதுபற்றி ‘புளோரி அனலிடிக்ஸ்’ நிறுவனம் ஆய்வு செய்து தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
‘‘2017ம் ஆண்டை பொறுத்தவரை மொபைல் ஆப் பயன்பாடு என்பது தேக்கநிலை அடைந்துள்ளதை காட்டுகிறது. எனினும் முக்கிய நிறுவனங்கள் தங்கள் இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளன. எனினும் பழைய நிறுவனங்கள் புதுமையை புகுத்தாததால் பின்னடைவை சந்தித்துள்ளன.
இதனால் மொபைல் ஆப் பயன்பாடு வளர்ச்சி விகிதம் 2016ம் ஆண்டு 11 சதவீதமாக இருந்த நிலையில், 2017ல் அது, 6 சதவீதமாக குறைந்துள்ளது. ஆப் பயன்பாடு குறைவதற்கு, தேடல்களுக்கு ஏற்ப புதிய புதிய ஆப்கள் உருவாக்கப்படாததும் காரணமாகும்.
பல நிறுவனங்கள் முந்தைய ஆப்களை அப்படியே பயன்பாட்டில் வைத்திருப்பதால்,, பயன்பாட்டாளர்களிடம், அதுதொடர்பான ஈர்ப்பு குறைந்துள்ளது. உலகம் முழுவதும் மொபைல் ஆப் பயன்படுத்துபவர்களில் 260 கோடி பேரில் 54 சதவீதம் பேர் தங்கள் பொருட்களை வாங்குவதற்காகவே ஆப்பை பயன்படுத்துகின்றனர்.
இதற்கு அடுத்த நிலையில், 43 சதவீதம் அளவில் இரண்டாவது இடத்தில் பொழுதுபோக்கு ஆப்கள் உள்ளன. இதில் இசை, சினிமா, நாடகம் என அனைத்துவிதமான பொழுது போக்குகளும் அடங்கும். இதுபோலவே, ஆண்ட்ராய்டு மொபைல் போன் தயாரிப்பாளர்களின் பல்வேறு ஆப்களும் மக்களின் பயன்பாட்டில் அதிகம் உள்ளன.
இந்த பிரிவில் ஆப்பிள் நிறுவனம் 34 சதவீதத்துடனும், சாம்சங் நிறுவனம் 28 சதவீதத்துடனும், சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஸியோமி உள்ளிட்ட பிற நிறுவனங்கள் சந்தையில் தற்போது வளர்ந்து வருகின்றன’’ எனக்கூறப்பட்டுள்ளது.