ஆப்பிள் நிறுவனத்துக்கு இழப்பீடு கொடுக்க முடியாது : சாம்சங்
சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களிடையேயான காப்புரிமை விவகாரத்தை சாம்சங் முடிவுக்கு கொண்டு வருவதாய் தெரியவில்லை.
கடந்த மாதம் ஆப்பிள் நிறுவனத்துக்கு சாதகமாக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சாம்சங் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 34 பக்கங்கள் கொண்ட மேல் முறையீடு மனுவில் சாம்சங் வழங்க உத்தரவிடப்பட்டிருக்கும் ரூ.3600 கோடி தொகை மிகவும் அதிகம் ஆகும், இந்த தீர்ப்பு ஆதாரமற்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகானத்தின் சான் ஜோஸ் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சாம்சங் – ஆப்பிள் நிறுவனங்களின் காப்புரிமை மீறல் வழக்கில் மே மாத வாக்கில் தீர்ப்பு வழங்கினார். சாம்சங் நிறுவனத்துக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பில் சாம்சங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.3600 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிடப்ப்டு இருந்தது.
ஏழு ஆண்டு கால பிரச்சனையில் ஆப்பிள் நிறுவனம் 1 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 6700 கோடி) தொகையை சாம்சங் நிறுவனத்திடம் காப்புரிமை பிரச்சனைக்கான இழப்பீடாக வழங்க வேண்டும் என கோரியது. ஏற்கனவே சாம்சங் நிறுவனம் 54.8 கோடி டாலர்களை இழப்பீடாக வழங்கியிருக்கும் நிலையில் மீதமிருக்கும் 39.9 கோடி டாலர்களை ஆப்பிள் நிறுவனம் கேட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் இரண்டு காப்புரிமை மீறல்கள்: அதாவது அமெரிக்க காப்புரிமை எண் D618,677 மற்றும் அமெரிக்க காப்புரிமை எண் D593,087 சார்ந்தது ஆகும். இதன் முதல் காப்புரிமை ஐபோனின் முன்பக்கம் கருப்பு நிற செவ்வக பகுதியையும், இரண்டாவது காப்புரிமை பெசல்கள் என அழைக்கப்படும் ஸ்கிரீனை சுற்றியிருக்கும் சிறிய பகுதிகளை சார்ந்தது ஆகும்.
காப்புரிமை சார்ந்த வழக்கு விசாரணையில் ஆப்பிள் நிறுவன வழக்கறிஞர் ஆப்பிள் ஐபோன்களில் வடிவமைப்பும் முக்கியத்துவம் வாயந்த அம்சம் என தெரிவித்திருந்தார். ஆப்பிள் பிரான்டு வடிவமைப்பு புரட்சிகரமானது என்றும் அவர் வாதாடினார். 2011-ம் நடைபெற்ற வழக்கின் போது ஆப்பிள் நிறுவனம் சார்பில் 275 கோடி டாலர்கள் இழப்பீடு கோரப்பட்ட நிலையில் ஆப்பிள் நிறுவனத்துக்கு 105 கோடி டாலர்களை இழப்பீடாக வழங்க சாம்சங் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது.