அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் பகிரங்க மன்னிப்பு கோரினார் மார்க் ஜுக்கர்பர்க்…!
அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் ஃபேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தால் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதற்காக, மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்புக்கு சாதகமாக பயன்படுத்த, கோடிக்கணக்கான ஃபேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள், லண்டனை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனத்தால் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதேபோல, அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிடும் வண்ணம் ரஷ்யாவை சேர்ந்தவர்களும் போலி கணக்குகளை உருவாக்கி ஃபேஸ்புக் மூலம் அமெரிக்க வாக்காளர்களின் சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை குழுக்கள் விசாரணை நடத்த உள்ளன. வர்த்தக குழு, நீதித்துறை குழுக்கள் தனித்தனியாகவும், கூட்டாகவும் ஃபேஸ்புக் நிறுவனர் ஜுக்கர்பெர்க்கிடம் விசாரணை நடத்த உள்ளன. இதை முன்னிட்டு அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு வந்த ஜூக்கர்பெர்க், எரிசக்தி மற்றும் வர்த்தக துறை செனட் குழுவில் இடம்பெற்றுள்ள குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சி எம்.பி.க்களை சந்தித்துப் பேசினார்.
இதைத் தொடர்ந்து, ஜுக்கர்பெர்க் அளித்த எழுத்துபூர்வமான மன்னிப்பை அந்தக் குழு வெளியிட்டுள்ளது. அதில் தங்களது பொறுப்பு குறித்து விரிவான கண்ணோட்டம் இல்லாமல் இருந்தது மிகப்பெரிய தவறுதான் என்று ஜூக்கர்பெர்க் குறிப்பிட்டுள்ளார்.
இது தன்னுடைய தவறு என்றும், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் ஜூக்கர்பெர்க் கூறியுள்ளார். செனட் குழுக்களின் விசாரணையின்போது ஜூக்கர்பெர்க் திருப்திகரமான பதில்களை அளிக்கத் தவறினால், ஃபேஸ்புக்கை கடுமையாக ஒழுங்குபடுத்தும் சட்டங்களுக்கு நாடாளுமன்றம் வலியுறுத்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.