அதிரடியாக அவசர கொள்முதல் நிலையங்களை திறக்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி – பி.ஆர்.பாண்டியன்….

காவிரி டெல்டாவில்  அறுவடைசெய்யப்பட்ட  நெல்லைக் கொள்முதல் செய்ய உடனடியாக உத்தரவிட்ட தமிழக முதல்வருக்குத் தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன்  நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் கூறியிருப்பதாவது,
”காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி சுமார் 1.25 லட்சம் ஏக்கரில் நடவு  செய்யப்பட்டு இருந்தது.  தற்போது மே முதல் வாரம் தொடங்கி அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளது. ஆனால் இன்னமும்  நேரடி நிலையங்கள் திறக்கப்படாததால் அந்த அறுவடைப் பணிகள்  நிறுத்தப்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் நேரிலும், தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்ததை அடுத்து நேற்று இரவு தமிழக முதலமைச்சர் அவர்கள்  கவனத்திற்கு இந்த தகவலை கொண்டு சென்றேன். இதனையடுத்து, அவர் உடனடியாக  இன்று முதல் தேவையான இடங்களில் நெல் கொள்முதல்  நிலையங்கள் திறக்கப்பட்டு உடனடியாகக் கொள்முதல் செய்ய தமிழக முதல்வர்  அதிரடியாக அவசர உத்தரவை  பிறப்பித்துள்ளதாக தமிழக முதல்வர்  அலுவலக அதிகாரிகள் தொலைபேசி முலம் தெரிவித்தனர். டெல்டா விவசாயிகளின் பாதிப்பை உணர்ந்து கொரோனா தொற்றின்  நெருக்கடி காலத்திலும் உடனடியாக  நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு முதல்வர் மற்றும்  உணவுத் துறை அமைச்சர், அரசு உயர் அதிகாரிகள் அனைவருக்கும் டெல்டா விவசாயிகள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று  தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை மத்திய அரசு அவமதிக்கிறது -பி.ஆர்.பாண்டியன்…..!!

தமிழக எம்.பி க்களை இடை நீக்கம் செய்ததன் மூலம் தமிழகத்தை மத்திய அரசு அவமதிப்பதாக  விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.

மேகேதாட்டு அணை தொடர்பாக கர்நாடக அரசுக்கும் மத்திய அரசுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 250 க்கும் மேற்பட்ட விவசாயிகள் நடை பயணம் மேற்கொண்டுள்ளனர். நடைபயண முடிவில் கர்நாடகா எல்லையான ஓசூரில் முற்றுகை போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே திருச்சியில்  செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர்.பாண்டியன், மேகேதாட்டுவில் சட்டத்திற்கு புறம்பாகவே மத்திய அரசு அணை கட்ட முயற்சிப்பதாக தெரிவித்தார்.  மேலும் மத்திய அரசு விவசாயக் கடனை தள்ளுபடி செய்யாததற்கும் அவர் கண்டனம் தெரிவித்தார்.